ஸக்காத் விதியாகும் ஊரில் அதனைப் பங்கீடு செய்யாமல் வேறு ஓர் ஊருக்கு அதனை நகர்த்தல்

FATWA # 010/ACJU/F/2006

Question

ஸக்காத் விதியாகும் ஊரில் அதனைப் பங்கீடு செய்யாமல் வேறு ஓர் ஊருக்கு அதனை நகர்த்தல் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

‘ஸக்காத் கடமையாகும்  ஊரில் அதனைப் பங்கீடு செய்யாமல் தகுந்த காரணங்கள் ஏதும் இல்லாமல் வேறு ஓர் ஊருக்கு அதனை நகர்த்துவது குற்றமாகும். ஸக்காத் விதியான ஒருவர், தான் தொழில் செய்யுமிடத்திலேயே அதனைப் பங்கீடு செய்வது கடமையாகும். ஆனால் அதனைப் பெறத் தகுதியானவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் தகுதியானவர்கள் இருக்கும் இடத்துக்கு நகர்த்தலாம்’ என்று ஷாபிஈ, ஹன்பலீ மத்ஹப்களைச் சார்ந்தோரும்,

‘ஸக்காத் நிதியை அது கடமையாகும் இடத்தில் பங்கீடு செய்யாமல், வேறு ஓர் ஊருக்கோ, இடத்துக்கோ நகர்த்தி, ஸக்காத் கடமையான ஊரில் உள்ளவர்களை விடவும் தேவையுடையவர்களுக்கு அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு அதனைப் பங்கீடு செய்யலாம்’ என்று ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்தோரும்,

‘ஸக்காத் கடமையாகும் ஊரில் அதனைப் பெறும் தகுதி உடையவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், தேவையுடையவர்கள் வசிக்கும் ஊருக்கு அதனை நகர்த்துவது கடமையாகும்’ என்று மாலிக்கீ மத்ஹபைச் சார்ந்தோரும் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கருத்துக்களை பொதுவாக நோக்குமிடத்து, ஸக்காத் விதியாகும் இடத்தில் உள்ள ஸக்காத் பெற அருகதையானவர்கள் தக்க காரணமின்றி புறக்கணிக்கப்படக் கூடாது என்பதும், வேறு ஓர் இடத்தில் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள், நெருங்கிய உறவினர்கள், தனது ஊரில் இல்லாத ஓர் இஸ்லாமிய சமூக நலன் ஆகிய காரணங்களுக்காக ஓர் ஊரில் இருந்து மற்றுமோர் ஊருக்கு ஸக்காத்தை நகர்த்தலாம் என்பதும் புலனாகின்றது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.