Researched Fatwa
றமழான் மாதம் அல்லாத காலங்களில் இஃதிகாஃப் இருத்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இஃதிகாஃப் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு வணக்கமாகும். இது பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்:
‘நீங்கள் மஸ்ஜித்களில் தங்கியவர்களாக (இஃதிகாஃப்) இருக்கும் போது (உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடாதீர்கள்.’ (அல்-பகரஹ் : 187)
இது சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து வாஜிப், ஸுன்னத் என வகைப்படுத்தப்படும். நேர்ச்சை செய்யப்பட்ட இஃதிகாஃப் வாஜிபாகவும், றமழான் மாதத்தின் இறுதிப் பத்து தினங்களில் இஃதிகாஃப் இருப்பது ஸுன்னத் முஅக்கதாவாகவும், பொதுவாக ஏனைய காலங்களில் இஃதிகாஃப் இருப்பது ஸுன்னத்தாகவும் கணிக்கப்படும்.
இஃதிகாஃப் இருப்பவர் தன் மீது நோன்பை கட்டாயமாக்கிக் கொண்டாலேயன்றி அவருக்கு நோன்பு அவசியமில்லை என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்தத்ரக் அல்-ஹாக்கிம்)
‘நோன்பாளியான நிலையில் இஃதிகாஃப் இருப்பதே மிகச் சிறந்ததாகும். எனினும் நோன்பின்றி இஃதிகாப் இருப்பதும், இராக் காலங்கள், நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாத (இரு) பெருநாள் தினங்கள், அய்யாமுத் தஷ்ரீக் போன்ற தினங்களில் இஃதிகாஃப் இருப்பதும் ஆகும்.’ (அல்-மஜ்மூஃ – பாகம்: 06, பக்கம்: 328) (பதிப்பு : தார் இஹ்யா அல்-துராஸ் அல்-அரபி)
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

