ஸகாத் பணத்தை உணவுப் பொதிகளாக வழங்குவது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2016/48-273

Question

கேள்வி : ஸகாத் பணத்தை உணவுப் பொதிகளாகக் கொடுக்கலாமா?

Fatwa

ACJU/FTW/2016/48-273
2016.12.02 – 1438.03.01

ஸகாத் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். அது செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்.

தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம், சேமித்து வைத்து உணவாக உட்கொள்ளும் தானியங்கள், திராட்சை மற்றும் ஈத்தம் பழம் ஆகியவற்றில் ஸகாத் கடமையாகும்.

ஸக்காத் கொடுக்கும்பொழுது தங்கம், வெள்ளி, ஆடு, மாடு, ஒட்டகம், சேமித்து வைத்து உணவாக உட்கொள்ளும் தானியங்கள், திராட்சை மற்றும் ஈத்தம் பழம் போன்றவற்றில் அப்பொருட்களையே ஸகாத்தாகக் கொடுக்கவேண்டும். தங்கம், வெள்ளியில் பணமாகவும் கொடுக்க முடியும். என்றாலும், வியாபாரப் பொருட்களில் பணத்தையே ஸக்காத்தாக் கொடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக பொருட்களைக் கொடுக்க முடியாது.

இக்கருத்தையே இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், மாலிக் ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் கூறுகின்றனர்.

இதற்கு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹமாஸ் என்பவருக்கு உங்களது வியாபாரப் பொருட்;களை விலைமதித்து ஸகாத் கொடுக்க வேண்டிய அளவை பெறுமதியில் கொடுங்கள் என்று கூறியது ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.1

என்றாலும், ஹனபி மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் வியாபாரப் பொருட்களின் ஸகாத்தைப் பொருளாகக் கொடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

வியாபாரப் பொருட்களில் ஸகாத் கொடுக்கும் போது பணத்திற்குப் பகரமாக பொருட்களைக் கொடுக்கக் கூடாது என்று கூறும் மார்க்க அறிஞர்கள் பின்வரும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்.

1. ஒரு பொருளில் ஸகாத் கடமையாகிவிட்டால், கடமையான அளவு ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்குச் சொந்தமானதாக மாறிவிடும். அவர்களுக்குச் சொந்தமான பணத்தை அவர்களிடமே கொடுத்துவிட வேண்டும். அவர்களது அனுமதியின்றி அதில் தலையிடுவது கூடாது.

2. ஸகாத்தைப் பொருளாகக் கொடுக்கும் பொழுது சிலர் தரத்தில் குறைந்த காலாவதியான பொருட்களையும் கொடுத்துவிடலாம். இது ஸகாத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.

எனவே, இக்காரணங்களையும் கருத்திற்கொண்டு பணம், வியாபாரப் பொருட்களில் ஸகாத் கொடுக்கும் போது பொருட்களைக் கொடுக்காமல் பணமாகவே கொடுத்தல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

———————————————————————————————————————-

[1]  وعن حماس بكسر الحاء المهملة وتخفيف الميم وآخره سين مهملة وكان يبيع الأدم قال قال لي عمر بن الخطاب يا حماس أد زكاة مالك فقلت مالي مال إنما أبيع الأدم قال قومه ثم أد زكاته ففعلت رواه الشافعي وسعيد بن منصور الحافظ في مسنده والبيهقي “المجموع” (كتاب الزكاة – كتاب الذهب والفضة )