அஷ்-ஷைக் சீ.ஐ.எம். அஸ்மிர் தலைமையிலான ஆலிம்கள் மற்றும் ஸாதாத்கள் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு

‘அல்-அகீதா அஸ்-ஸஹீஹா’ நூல் வெளியீட்டுக் குழுவினர், 2026 செப்டம்பர் 30அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட ‘அல்-அகீதா அஸ்-ஸஹீஹா’ நூல் குறித்த அறிமுகத்தினை வழங்குவதுடன் அதன் பிரதிகளை ஜம்இய்யா தரப்பினருக்கு கையளிக்கும் நோக்கில் இச்சந்திப்பை மேற்கொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சந்திப்பிற்காக வருகை தரும் அனைத்து தரப்பினரையும் கண்ணியமாக வரவேற்று அவர்களது விடயங்களை கேட்டறிந்து ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடலை மேற்கொள்வது ஜம்இய்யாவின் வழக்கமாகும்.

அதனடிப்படையில், குறித்த தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, வருகை தந்தவர்களை வரவேற்கும் முகமாக ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையில் அகீதா, தஸ்கியா, மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்கள் ஆகிய அம்சங்கள் பற்றிய தெளிவுரை ஒன்றினை விளக்கக் காட்சிகளுடன் ஹதீஸே ஜிப்ரீலை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்தார். அத்தோடு தரீக்கா சார்ந்த மூத்த ஆலிம்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆற்றிய அளப்பரிய சேவைகளையும் பங்களிப்புகளையும் அவர் தனதுரையில் நினைவுகூர்ந்தார்.

குறித்த சந்திப்பில் இஸ்லாம் பாடத்திட்ட மேம்பாடு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, அல்-அகீதா அஸ்-ஸஹீஹா பிரதிகள் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

மேலும், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட ‘மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளையும் வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய ‘மன்ஹஜ்’, ஜுஸ்உ அம்ம தமிழ் மொழிபெயர்ப்பு, இறுதி நபித்துவம் மற்றும் தீவிரவாதம் வேண்டாம் உள்ளிட்ட நூற்பிரதிகள் வருகை தந்திருந்த பிரமுகர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இச்சந்திப்பில், அஷ்-ஷைக் சீ.ஐ.எம். அஸ்மிர் தலைமையிலான ஆலிம்கள் மற்றும் ஸாதாத்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில், ஜம்இய்யா சார்பில் அதன் தலைவர், உப தலைவர் உதவிப் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன