இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய மார்க்க விளக்கம்

Question

இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய மார்க்க விளக்கம் என்ன?

Fatwa

ACJU/FTW/2018/21-342
2018.08.17 (1439.12.05)

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

துல் ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப பத்து நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் நல்லமல்கள் ஏனைய நாட்களில் செய்யும் நல்லமல்களை விட சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். ‘ஜிஹாதை விடவுமா’? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 969) 1

அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல் ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 09 நாட்களிலும் நோன்பு நோற்றுள்ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறே குறிப்பாக பிறை 09ஆம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பிற்கும் பல சிறப்புக்கள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது அது சென்ற வருடம் மற்றும் இவ்வருடம் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாகவும் ஆகிவிடும் என்று கூறினார்கள். (ஸஹீஹு முஸ்லிம் -1162) 1

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் துல் ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 09ஆம் நாள் (ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்னைய தினம்) அறபா மைதானத்தில் தரித்திருப்பது ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

சில அறிஞர்கள் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்றுகூடுவதை வைத்து, அதே தினத்தில் ஏனைய நாடுகளிலும் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். உள்நாட்டு பிறையின் அடிப்படையில் மாதத்தை தீர்மானிப்பவர்களுக்கு மத்தியிலும் இந்த சந்தேகம் காணப்படுகின்றது.

மக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 09ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 09ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

புவியியலின் அடிப்படையில் பார்க்கும் போது பிராந்தியத்துக்குப் பிராந்தியம் நேரங்கள் வேறுபடுவதால் நாட்களின் ஆரம்பமும் வேறுபடுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறே மாதங்களின் ஆரம்பமும் வேறுபடும். எனவே, மக்காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடுகளிலும் அதே நேரம் காணப்படுவது சாத்தியமற்றதாகும்.

ஏனெனில், மக்காவில் பிறை தென்படுவதற்கு முன்னைய நாள் அல்லது அடுத்த நாள் வேறு பகுதிகளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை யாவரும் அறிவர். அந்த வகையில் மக்காவில் 09ஆவது தினமாக இருக்கும் பொழுது ஏனைய பகுதிகளில் பிறை 08ஆக அல்லது 10ஆக இருக்கும். எனவே, மக்காவை மையமாக வைத்து நோன்பு நோற்றால் அதற்கு முன்னைய தினம் பிறை தென்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு 10ஆம் நாளாக இருக்கும். அன்றைய தினம் அவர்களுக்குப் பெருநாளாகும். அத்தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும்.

மக்காவில் அமைந்துள்ள றாபிதாவின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடும், பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.

இதற்கு பின்வரும் அடிப்படைகள் ஆதாரங்களாக உள்ளன:

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் ‘உங்களில் றமழான் மாதத்தை யார் அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்’ (02:185) என்று கூறுகிறான். இதன் விளக்கம் யாதெனில், உங்களில் ரமழான் மாதத்தை அடையாதவர்கள் (ரமழான் மாதத்துக்கான பிறை தென்பட்டதாக அறிவிக்கப்படாத பகுதிகளில்) நோன்பு நோற்கத் தேவையில்லை என்பதாகும்.

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்பியுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்’ என்று கூறியுள்ளார்கள்.3 (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்) இதன் விளக்கமும் நீங்கள் பிறையைக் காணாவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்பதாகும்.

இன்னும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ள சம்பவத்தில், குரைப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்திலிருந்து மதீனா வந்தபொழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்பித்ததற்கும் மதீனாவில் ஆரம்பித்ததற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததைக் கண்ட, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நாங்கள் மதீனாவில் பிறை கண்டதன் அடிப்படையில் தான் நோன்பை நோற்றோம். அதன் அடிப்படையிலேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்தியாசமாக இருந்தாலும் சரியே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறே எமக்கு ஏவினார்கள் என்று கூறினார்கள்.4

இந்த ஹதீஸும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பிறை மாத ஆரம்பம் வித்தியாசம் அடையும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

எனவே, இவற்றின் அடிப்படையில் தலைப்பிறை தென்படுவதற்கேற்ப நாட்டுக்கு நாடு அறபாவுடைய தினம் வேறுபடும் என்பதால், இலங்கை நாட்டில் துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே, இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.

இக்கருத்தையே அறபா நோன்பு விடயத்தில் அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹிமஹுல்லாஹ் அவர்கள்5 உட்பட பெரும்பான்மையான தற்கால மார்க்க அறிஞர்களும் தாருல் இப்தா, தாருல் உலூம் தேவ்பந்த்6 மற்றும் றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமிய்யின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம்7 ஆகிய ஃபத்வா அமைப்பினர்களும் கொண்டுள்ளனர்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

———–

[1] عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ» (بَابُ فَضْلِ العَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ – أَبْوَابُ العِيدَيْنِ – صحيح البخاري)

[2] قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ، صِيَامُ يَوْمِ عَرَفَةَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ، وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ» (بَابُ اسْتِحْبَابِ صِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَوْمِ يَوْمِ عَرَفَةَ وَعَاشُورَاءَ وَالِاثْنَيْنِ وَالْخَمِيسِ- كتاب الصيام – صحيح مسلم- تبويب الإمام النووي)

[3] عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمِّيَ عَلَيْكُمُ الشَّهْرُ فَعُدُّوا ثَلَاثِينَ» (بَابُ وُجُوبِ صَوْمِ رَمَضَانَ لِرُؤْيَةِ الْهِلَالِ، وَالْفِطْرِ لِرُؤْيَةِ الْهِلَالِ، وَأَنَّهُ إِذَا غُمَّ فِي أَوَّلِهِ أَوْ آخِرِهِ أُكْمِلَتْ عِدَّةُ الشَّهْرِ ثَلَاثِينَ يَوْمًا – كتاب الصيام – صحيح مسلم (تبويب الإمام النووي)) (بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:27]: «إِذَا رَأَيْتُمُ الهِلاَلَ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا – كتاب الصوم – صحيح البخاري)

[4] عَنْ كُرَيْبٍ، أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ، بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ، قَالَ: فَقَدِمْتُ الشَّامَ، فَقَضَيْتُ حَاجَتَهَا، وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ، فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ، ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ، فَسَأَلَنِي عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ: مَتَى رَأَيْتُمُ الْهِلَالَ؟ فَقُلْتُ: رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ، فَقَالَ: أَنْتَ رَأَيْتَهُ؟ فَقُلْتُ: نَعَمْ، وَرَآهُ النَّاسُ، وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ، فَقَالَ: ” لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ، فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ، أَوْ نَرَاهُ، فَقُلْتُ: أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ؟ فَقَالَ: لَا، هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” (بَابُ بَيَانِ أَنَّ لِكُلِّ بَلَدٍ رُؤْيَتَهُمْ وَأَنَّهُمْ إِذَا رَأَوُا الْهِلَالَ بِبَلَدٍ لَا يَثْبُتُ حُكْمُهُ لِمَا بَعُدَ عَنْهُمْ – كتاب الصيام – صحيح مسلم (تبويب الإمام النووي)

[5] Available at https://islamqa.info/ar/40720)  accessed at 17.08.2018

[6] Available at http://www.darulifta-deoband.com/home/en/Jumuah–Eid-Prayers/57059) accessed at 17.08.2018

[7] القرار السابع من قرارات مجلس المجمع الفقهي الإسلامي لرابطة العالم الإسلامي المنعقد في مكة المكرمة في الفترة من 7 إلى 17 من شهر ربيع سنة 1401 هـ في دورته الرابعة  تحت موضوع : بيان توحيد الأهلة من عدمه

Available at : http://www.alifta.net/Fatawa/fatawaChapters.aspx?languagename=ar&View=Page&PageID=4118&PageNo=1&BookID=2 accessed at 17.08.2018