விளையாட்டுக்களைப் போட்டிகளாக நடாத்தி அவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல் தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

மத்ரஸா மாணவர்களுக்கு மத்தியில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி அவர்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல் தொடர்பாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் போது அதற்கான செலவுகளுக்கு அதில் கலந்து கொள்பவர்களிடமிருந்து பணங்களை அறவிடுவது தொடர்பாகவும், அதனை மார்க்க முறைப்பிரகாரம் நடாத்துவதற்கு மத்ரஸாக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு நலன்புரி அமைப்பாக செயற்படுவது தொடர்பாகவும் வழிகாட்டலை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Fatwa

ACJU/FTW/2024/13-545/ORG-01
2024.03.06 – 1445.08.24

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

 எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

1. இஸ்லாம் மனித உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும் மன அழுத்தங்களை இல்லாமலாக்கவும் திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்கும் விளையாட்டுக்களை அனுமதித்துள்ளது. அவ்விளையாட்டுக்கள் ஆரோக்கியத்துடன் மார்க்கக் கடமைகளை சோர்iவின்றி நிறைவேற்றுவதற்கு துணை நிற்கின்றன.

யூகத்தையும் அனுமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட பிரயோஜனம் இல்லாத விளையாட்டுக்கள் இஸ்லாம் தடை செய்துள்ளது. அவ்வாறே, சூது போன்றவற்றுடன் சம்பந்தப்படும் விளையாட்டுக்கள் இன்னும் கற்களை எறிந்து விளையாடுவது போன்ற பிறருக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுக்களையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏ (12:12)

நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்’ என்று கூறினார்கள். (12:12)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: “رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ”. (صحيح البخاري -5236)

ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைத் தமது மேலாடையால் மறைத்துக் கொண்டிருக்க மஸ்ஜித் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) சடைந்துவிடும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். (ஸஹீஹுல் புகாரி: 5236)1

இஸ்லாம் மனித உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான விடயங்களை வழங்குமாறு வழிகாட்டியுள்ளது.

அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வழிபடுவதாகக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஸஹாபியிடம்: ‘அவ்வாறு செய்ய வேண்டாம்! (சிலநாள்) நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். (சிலநாள்) நோன்பை விட்டுவிடுங்கள்! (இரவில் சிறிது நேரம்) நின்று வழிபடுங்கள்! (சிறிது நேரம்) உறங்குங்கள்! என்று கூறிய பிறகு:

“فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا”

‘உமது உடலுக்கென (செய்ய வேண்டிய) கடமைகள் உமக்கு இருக்கின்றன. உமது கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன. உமது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன’ எனக் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி – 5199)2

அவ்வாறே, இஸ்லாம் நீந்துதல், அம்பெய்தல், குதிரைப் போட்டி, ஒட்டகப் போட்டி போன்ற விளையாட்டுக்களுக்கு முக்கியத்துமளித்துள்ளது.3

அதாஃ இப்னு அபீ ரபாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நான்கு விடயங்களைத் தவிர அல்லாஹு தஆலாவுடைய ஞாபகமின்றி செய்யப்படும் ஒவ்வொன்றும் வீணான விளையாட்டுக்களாகும். அந்த நான்கு விடயங்களுமாவன: ஒருவர் தனது மனைவியுடன் உறவாடுதல், ஒருவர் தனது குதிரையை பயிற்றுவித்தல், (ஒருவர் அம்பெய்வதற்காக) இரு இலக்குகளுக்கிடையில் நடத்தல், ஒருவர் நீந்துவதற்குக் கற்றுக்கொள்ளல். (நூல் : நஸாஈ 8889) 4

மற்றுமொரு ஹதீஸில்:

‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்’ என்று கூறினார்கள்.5

2. ஆகுமான விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதித்திருப்பது போலவே அவற்றைப் போட்டியாக நடாத்துவதற்கும் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

عن عائشة رضي الله عنها أنها كانت مع النبيِّ ﷺ في سفرٍ، قالت: فسابقتُه فسبقتُه على رِجليَّ، فلما حملتُ اللحمَ سابقتُه فسبقَني، فقال: هذه بتلك السبْقَة .(أخرجه أبو داود 2578)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது நான் அவர்களுடன் ஓட்டப் போட்டி இட்டு, அவர்களை முந்தி வெற்றி பெற்றேன். பிறகு என்னுடைய உடல் பருமன் அதிகரித்த போது மற்றுமொறு தடவை ஓட்டப் போட்டி வைக்க, அதில் நபியவர்கள் என்னை முந்தி விட்டு, இது அதற்குப் பகரம் என்று குறிப்பிட்டார்கள். (அபூ தாவூத்)

عَنْ ابْنِ عُمَر رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ سَابَقَ بِالْخَيْلِ الَّتِي قَدْ أُضْمِرَتْ مِنْ الْحَفْيَاءِ وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةَ الْوَدَاعِ وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنْ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ وَكَانَ ابْنُ عُمَرَ فِيمَنْ سَابَقَ بها (أخرجه مسلم 1870)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பயிற்சியளிக்கப்பட்டு) மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கிடையே ‘அல்ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். ‘ஸனிய்யத்துல் வதா’ மலைக் குன்று வரை அதன் பந்தய எல்லையாக இருந்தது. (அவ்வாறே) பயிற்சியளிக்கப்பட்டு மெலிய வைக்கப்படாத குதிரைகளுக்கிடையே ‘ஸனிய்யத்துல் வதா’ எனும் இடத்திலிருந்து ‘பனூ ஸுரைக் பள்ளிவாசல்’ வரை பந்தயம் வைத்தார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் ஆவேன் என இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம்- 1870)

3. பரிசுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடாத்துதல்

• அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை போட்டியாக நடாத்தும் போது வெற்றி பெறுபவருக்கு பகரம் (பரிசு) ஒன்றை நிர்ணயித்து உடன்படிக்கை செய்து விளையாடுவதாயின் அவ்விளையாட்டு போரில் பயனளிக்கும் அம்பெய்தல், குதிரைப்போட்டி போன்றவையாக இருத்தல் வேண்டும். இதுவே ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களின் கூற்றாகும். 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் நாட்டிலிருந்து தனக்குக் கிடைத்த ஆடைகளுக்குப் பகரமாக குதிரைகளுக்கிடையில் போட்டிகள் நடாத்தி அதில் முதலாமிடத்தைப் பெற்றவருக்கு மூன்று ஆடைகளையும், இரண்டாம் நபருக்கு இரண்டு ஆடைகளையும், மூன்றாம் நபருக்கு ஓர் ஆடையையும், நான்காவது நபருக்கு ஒரு தீனாரையும், ஜந்தாம் நபருக்கு ஒரு திர்ஹத்தையும், ஆறாம் நபருக்கு ஒரு வெள்ளியையும் கொடுத்த விடயத்தை இப்னுத் தீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இமாம் பத்ருத்தீன் அல் அய்னீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹுல் புஹாரியுடைய விரிவுரையில் பதிவு செய்துள்ளார்கள். 7

• போருக்கு பயனளிக்காத ஓட்டம், கிரிக்கட், உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களைப் பொருத்தவரையில் அவற்றில் வெற்றி பெறுபவருக்கு தோல்வியுற்றவர் அல்லது போட்டியில் கலந்து கொள்ளாத வேறு தரப்பினர் பரிசு ஒன்றை வழங்குவதாக உடன்படிக்கை செய்து விளையாட முடியாது. 8

எனினும், இப்போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு பரிசு (பகரம்) ஒன்றை வழங்குவதாக உடன்படிக்கை ஏதுமின்றி நன்கொடையாக வழங்குவதற்கு முடியும். அப்பரிசு வழங்கப்படாவிட்டால் வெற்றி பெற்ற தரப்பு அதனை பலவந்தமாகப் பெற்றுக் கொள்வதற்கு முடியாது என்ற அடிப்படையில் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

இது போன்ற விளையாட்டுப் போட்டிகளின் போது தேவைப்படக்கூடிய ஏனைய செலவுகளை கலந்துக் கொள்பவர்கள் தமக்கிடையில் பிரித்துக் கொள்வதற்கும் அல்லது போட்டியில் கலந்து கொள்ளாதவர்களிடமிருந்து பெற்று செலவு செய்வதற்கும் முடியும்.

• யூகத்தையும் அனுமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட பிரயோஜனமளிக்காத விளையாட்டுக்கள் மற்றும் சூது போன்றவற்றுடன் சம்பந்தப்படும் மார்க்கத்தில் அனுதிக்கப்படாத விளையாட்டுக்களை பகரம் ஒன்றை நிர்ணயித்தோ அல்லது நிர்ணயிக்காமலோ எவ்வகையிலும் விளையாட முடியாது.

4. விளையாடும் போது பின்வரும் ஒழுங்குகளைக் கவனித்துக் கொள்ளல் வேண்டும்.

• விளையாடும் போது தன் மீது பர்ழான, ஸுன்னத்தான விடயங்களை வீணடிக்காமல் இருப்பதும், தடுக்கப்பட்ட விடயங்களை செய்யாமல் இருப்பதும் அவசியமாகும்.9 அவ்விளையாட்டு பர்ழானவற்றை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருப்பின் அந்நேரத்தில் அதனை விளையாடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாக ஆகிவிடும்.

• உடலில் கட்டாயமாக மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை மறைத்துக் கொள்வது அவசியமாகும்.

• ஆண் பெண் கலப்பைத் தவிர்த்தல்.

• இசைகளைத் தவிர்த்தல்.

• பிறருக்கு இடைஞ்சல் மற்றும் நோவினை ஏற்படுத்தாதிருத்தல்.

5. மேற்கூறப்பட்ட இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை அரபுக் கல்லூரிகளில் போட்டிகளாக நடாத்துவதாயின் கல்விசார் நடவடிக்கைகளுக்கும் ஆலிம்களின் கண்ணியத்திற்கும் எவ்வித விளைவையும் ஏற்படடுத்தாத வகையில் நடாத்துவதில் தவறேதுமில்லை.

எனினும், அரபுக் கல்லூரிகளில் மாணவர்களது கல்விசார் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக அமையும் கல்விசார்ந்த போட்டிகளை நாடலாவிய ரீதியில் ஏற்பாடு செய்து அதன் மூலம் அரபு கல்லூரிகளை மேம்படுத்தும் முயற்சிகைளை மேற்கொள்வதற்கு முக்கிய கவனம் செலுத்துமாறு ஆலோசனையாக கூறுகின்றோம்.

அவ்வாறே நீங்கள் கோரியிருப்பது போன்று இது போன்ற விடயங்களை மார்க்க முறைப் பிரகாகரம் மேற்கோள்வதற்கு மத்ரஸாக்களை ஒன்றிணைத்து ஒரு நலன்புரி அமைப்பை உருவாக்கி அதனூடாக மேற்குறித்த விடயங்களைக் கவனத்திற் கொண்டு ஆலிம்களின் ஆலோசனைகளுடன் முன்னெடுப்பதற்கு முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் 
செயலாளர், ஃபத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா