மரணித்தவரின் பிள்ளைகளது சொத்துக்களைப் பராமரிப்பது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

மரணித்தவரின் பிள்ளைகளது சொத்துக்களைப் பராமரிப்பது தொடர்பான மார்க்க விளக்கத்தினை தரவும்.

Fatwa

ACJU/FTW/2025/21-603/ORG-01
2025.08.12 (1447.02.17)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அநாதைகளின் சொத்துக்களை அழிந்து போகாது பாதுகாப்பதும் அதனை வளர்ப்பதும் மிக முக்கியமானதாகும். ஆகவே, அவர்கள் பருவ வயதை அடைந்து அச்சொத்துக்களை பராமரிப்பதற்கான தகுதியைப் பெற்றுக் கொள்ளும் வரை அச்சொத்துக்கள் எவரால் பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் அவர் அவற்றை எவ்வாறு பாதுக்க வேண்டும் என்பது பற்றியும் இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒருவர் மரணிக்கும் போது அவரது பிள்ளைகள் பருவ வயதை அடையாதவர்களாகவும் சொத்துடையவர்களாகவும் இருப்பின் அச்சொத்துக்களை பாதுகாப்பதற்கு பின்வருவோர் பொறுப்பாகுவர்.1

01. மரணித்தவரின் தந்தை

02. தந்தையால் பொறுப்பாக்கப்பட்டவர். وصي الأب

03. தந்தையின் தந்தையால் பொறுப்பாக்கப்பட்டவர். وصي الجد

04. தந்தையின் தந்தையால் பொறுப்பாக்கப்பட்டவர் இல்லாத போது ஓர் ஊரில் அல்லது ஓர் இடத்தில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட நீதிபதி பொறுப்பாகுவார்.

05. அவரும் இல்லாத பட்சத்தில் இது தொடர்பான அறிவுள்ள முஸ்லிம்கள் இச்சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வர்.2

அநாதைகளின் சொத்துக்களை பராமரிப்பதற்கான பொறுப்பை மேற்கொள்ளவதற்கு பல நன்மைகள் மார்க்கத்தில் கூறப்பட்டிருப்பதைப் போன்று அப்பொறுப்பை முறையாக நிறைவேற்றாதவர்களுக்கென பல எச்சரிக்கைகளும் வந்துள்ளன. அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا‌ ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا ( سورة النساء : 10)‏

“அநாதைகளின் சொத்துகளை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். பின்னர் மறுமையில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.” (04 : 10)

ஆகவே, அநாதைகளின் சொத்துக்களை பராமரிப்பவர் பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள்ளல் வேண்டும்.

01. சொத்துக்களைப் பராமரிப்பவர் மார்க்க வரையறைகளைப் பேணக்கூடிய வல்ல மனிதராக இருத்தல் வேண்டும்.3

02. சொத்துகள் அழியாது பாதுகாப்பது மற்றும் அவற்றை முதலீடு செய்வது வளர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். (குறிப்பாக பணத்தின் மூலம் கட்டிடம், கட்டிடம் போன்ற அசையாச் சொத்துக்களை வாங்கி வைப்பது சிறந்ததாகும். அதற்கு முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் நஷ்டம் ஏற்படாத வகையில் வியாபாரத்தில் முதலீடு செய்தல்).4

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ﷺ خَطَبَ النَّاسَ فَقَالَ: «أَلَا مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ فِيهِ، وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ» (سنن الترمذي ٦٤١)

“எவர் அநாதையின் சொத்தைப் பராமரிக்கின்றாரோ அவர் அதன் மூலம் வியாபாரம் செய்யட்டும். அதனை ஸகாத் முழுமையாக இல்லாமல் ஆக்கும் வரை சேமிப்பில் வைத்திருக்க வேண்டாம். (நூல்: ஸுனன் அந்-நஸாஈ : 641)

03. பிள்ளைகளுக்கான அன்றாட செலவுகள் மற்றும் ஏனைய சகல தேவைகளுக்குமான ஏற்பாடுகளை குறித்த சொத்துக்களில் இருந்தும் செலவு செய்ய முடியும். சொத்துக்களைப் பராமரிப்பவர் அவற்றிக்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது அவசியமாகும்.5

04. பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால் குறித்த சொத்தில் இருந்து எந்தவொன்றையும் எடுப்பதற்கு அனுமதி கிடையாது. இருந்தாலும் பராமரிப்பவர் தேவையுடையவராக (ஏழையாக) இருந்தால் அதிலிருந்து நியாயமான முறையில் தேவைக்கேற்ப மட்டும் எடுத்துக் கொள்ள முடியும்.6

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ‌ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَاْكُلْ بِالْمَعْرُوْفِ‌ ؕ (سورة النساء: 06)

“இன்னும் (அநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் – ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்.” (04 : 06)

05. பிள்ளைகள் பருவ வயதை அடைந்து, கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கான தகைமையை பெற்றுக் கொண்டால் அச்சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ ۚ (سورة الأنعام : 152)

“அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரை நியாயமான முறையில் தவிர நெருங்காதீர்கள்.” (06 : 152)

06. தேவைப்படும் போது அநாதைகளின் சொத்துக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

————

[1] فَصْلٌ فِيمَنْ يَلِي أَمْرَ الصَّبِيِّ وَالْمَجْنُونِ، وَكَيْفَ يَتَصَرَّفُ أَمَّا الَّذِي يَلِي، فَهُوَ الْأَبُ ثُمَّ الْجَدُّ، ثُمَّ وَصِيُّهُمَا، ثُمَّ الْقَاضِي، أَوْ مَنْ يُنَصِّبُهُ الْقَاضِي. (روضة الطالبين وعمدة المفتين ٤/‏١٨٧ — النووي (ت ٦٧٦)

[2] قَالَ الْجُرْجَانِيِّ: وَإِذَا لَمْ يُوجَدْ أَحَدٌ مِنْ الْأَوْلِيَاءِ الْمَذْكُورِينَ، فَعَلَى الْمُسْلِمِينَ النَّظَرُ فِي حَالِ مَحْجُورِهِمْ وَتَوَلِّي حِفْظَ مَالِهِ (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

[3] قُلْتُ: وَهَلْ يَحْتَاجُ الْحَاكِمُ إِلَى ثُبُوتِ عَدَالَةِ الْأَبِ وَالْجَدِّ لِثُبُوتِ وِلَايَتِهِمَا؟ وَجْهَانِ حَكَاهُمَا الْقَاضِي أَبُو الطَّيِّبِ، وَالشَّاشِيُّ، وَآخَرُونَ. وَيَنْبَغِي أَنْ يَكُونَ الرَّاجِحُ، الِاكْتِفَاءُ بِالْعَدَالَةِ الظَّاهِرَةِ. – وَاللَّهُ أَعْلَمُ -. (روضة الطالبين وعمدة المفتين ٤/‏١٨٧ — النووي (ت ٦٧٦)

[4] وَأَمَّا كَيْفِيَّةُ التَّصَرُّفِ، فَالْقَوْلُ الْجُمْلِيُّ فِيهِ: كَوْنُ التَّصَرُّفِ عَلَى وَجْهِ النَّظَرِ وَالْمَصْلَحَةِ،  (روضة الطالبين وعمدة المفتين ٤/‏١٨٧ — النووي (ت ٦٧٦)

[5] (وَيُنْفِقُ عَلَيْهِ بِالْمَعْرُوفِ) فِي طَعَامٍ وَكِسْوَةٍ وَغَيْرِهِمَا مِمَّا لَا بُدَّ مِنْهُ بِمَا يَلِيقُ بِهِ فِي إعْسَارِهِ وَيَسَارِهِ، فَإِنْ قَتَّرَ أَثِمَ وَإِنْ أَسْرَفَ أَثِمَ وَضَمِنَ (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

[6] فَإِنْ كَانَ فَقِيرًا وَشُغِلَ بِسَبَبِهِ عَنْ الِاكْتِسَابِ أَخَذَ الْأَقَلَّ مِنْ الْأُجْرَةِ وَالنَّفَقَةِ بِالْمَعْرُوفِ. قَالَ تَعَالَى ﴿وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ﴾ [النساء: ٦] (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ٣/‏١٥٦ — الخطيب الشربيني (ت ٩٧٧)