ஒருவருக்குச் சொந்தமான வர்த்தகப் பெயர் (Trade Name) அல்லது வர்த்தக முத்திரையை (Trade Mark) அனுமதியின்றி இன்னுமொருவர் பயன்படுத்துவது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

ஒருவருக்குச் சொந்தமான வர்த்தகப் பெயர் (Trade Name) அல்லது வர்த்தக முத்திரையை (Trade Mark) அனுமதியின்றி இன்னுமொருவர் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

Fatwa

ACJU/FTW/2025/11-593/ORG-01
2025.05.23 (1446.11.24)

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இஸ்லாம் பணம் சம்பாதிப்பதை ஆகுமாக்கியுள்ளதுடன் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான சகல வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது.

ஒருவர் வியாபாரம் செய்யும் போது தனது வாடிக்கையாளருடன் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என ஆர்வமூட்டி, அவற்றை கடைபிடிப்பவர்களுக்கு சிறப்புக்களையும் கூறியுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِي سَعِيدٍ، رضي الله عنه عَنْ النَّبِيِّ ﷺ، قَالَ: التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ. (سنن الترمذي : 1209)

“அபூ ஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து அறிவிப்பதாவது: நேர்மையான, நம்பிக்கைக்குரிய வியாபாரி நபிமார்களுடனும், உண்மையார்களுடனும் (நம்பிக்கையில் உறுதியானவர்களுடனும்), ஷஹீத்களுடனும் மறுமைநாளில் எழுப்பப்படுவார்.” (நூல்: ஸுனனுத் திர்மிதி : 1209)

மேலும், ஒருவர் தனது வியாபாரத்தில் பொய் மற்றும் ஏமாற்றம் செய்வதையும் இஸ்லாம் எச்சரித்துள்ளது. இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ ﷺ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا، فَقَالَ: مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ قَالَ: أَصَابَتْهُ السَّمَاءُ، يَا رَسُولَ اللهِ. قَالَ: أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ؟ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي ».(صحيح مسلم : 164)

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) ஒரு தானியக் குவியலைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கையை குவியலுக்குள் நுழைத்தபோது விரல்களில் ஈரம் பட்டது. உடனே அவர்கள், ‘உணவின் உரிமையாளரே! இது என்ன? ‘ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே! ‘ என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஈரமானதை மக்கள் பார்க்கும் வகையில் மேலே வைத்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டுவிட்டு, ‘மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்.’ என்று கூறினார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் 164)

தற்காலத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது வணிகத்திற்கு தனித்துவமான பெயர், வர்த்தக அடையாளம், வணிக முத்திரை போன்றவற்றைப் பதிவு செய்வது பல இடங்களில் பொதுவான நடைமுறையாக உள்ளது.

ஒருவர் ஒரு வர்த்தகப் பெயரை (Trade Name) தனக்கு மாத்திரம் பயன்படுத்த முடியுமானதாகவும் தனது அனுமதின்றி அதனை இன்னுமொருவருக்கு பயன்படுத்த முடியாத வகையிலும் முறையாகப் பதிவுசெய்து அதற்குரிய அனுமதிப் பத்திரத்தைப் பெற்றிருந்தால் குறித்த பெயர், பதிவு செய்த அந்நபருக்குச் சொந்தமாகும் என்ற சட்டம் தற்போது பல இடங்களிலும் நடைமுறையிலுள்ளது.

ஒருவர் தனக்குச் சொந்தமான, சுத்தமான பொருளை அல்லது அப்பொருளின் பயன்பாட்டை விற்றுப் பணம் ஈட்டுவதற்கும் அதனைப் பணம் கொடுத்து வாங்குவதற்கும் மார்க்கம் அனுமதித்துள்ளது.1

இந்நிலையில், ஒருவர் தனது வணிகத்திற்கு தனித்துவமான பெயர், அடையாளம், முத்திரை போன்றவற்றைப் பதிவு செய்து கொண்டால் அப்பெயர் மார்க்க அடிப்படையில் அந்நபருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுவதுடன் அதனை விற்றுப் பணம் ஈட்டுவதற்கும் பணம் கொடுத்து வாங்குவதற்கும் முடியுமான, விலை மதிப்புள்ளதாக ஆகிவிடும் என தற்கால மார்க்க அறிஞர்களும்2 ஃபத்வா அமைப்புக்களும் தீர்ப்பு வழங்கியுள்ளன.3

மேலும், ஒருவர் ஒரு பெயரை பதிவு செய்வதற்கு முன்னர், அப்பெயர் பலராலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால், பதிவு செய்யப்படும் நாள் வரை, அந்தப் பெயரால் கொள்வனவு செய்தவர்கள் அப்பொருட்களை விற்பனை செய்து கொள்ளவதற்கு அனுமதியுள்ளது.

எனினும், அப்பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஒருவர், அதன் உரிமையாளரின் அனுமதியின்றி அப்பெயரால் பொருட்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


[1] (كِتَابُ الْبَيْعِ) …..وَهُوَ لُغَةً مُقَابَلَةُ شَيْءٍ بِشَيْءٍ وَشَرْعًا: عَقْدٌ يَتَضَمَّنُ مُقَابَلَةَ مَالٍ بِمَالٍ بِشَرْطِهِ الْآتِي لِاسْتِفَادَةِ مِلْكِ عَيْنٍ أَوْ مَنْفَعَةٍ مُؤَبَّدَةٍ، (وَقَوْلُهُ: مُؤَبَّدَةٍ) كَحَقِّ الْمَمَرِّ إذَا عَقَدَ عَلَيْهِ بِلَفْظِ الْبَيْعِ. اهـ ع ش.)  تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٤/‏٢١٥ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)

[2] الحقوق المعنوية إن مجلس مجمع الفقه الإسلامي المنعقد في دورة مؤتمره الخامس بالكويت من ١ إلى ٦ جمادى الأولى ١٤٠٩ هـ/١٠ إلى ١٥ كانون الأول (ديسمبر) ١٩٨٨م. بعد اطلاعه على البحوث المقدمة من الأعضاء والخبراء في موضوع (الحقوق المعنوية) واستماعه للمناقشات التي دارت حوله. قرر: أولًا: الاسم التجاري، والعنوان التجاري، والعلامة التجارية، والتأليف والاختراع أو الابتكار هي حقوق خاصة لأصحابها أصبح لها في العرف المعاصر قيمة مالية معتبرة لتمول الناس لها. وهذه الحقوق يعتد بها شرعًا فلا يجوز الاعتداء عليها. ثانيًا: يجوز التصرف في الاسم التجاري أو العنوان التجاري أوالعلامة التجارية ونقل أي منها بعوض مالي إذا انتفى الغرر والتدليس والغش باعتبار أن ذلك أصبح حقًا ماليًا.  (الفقه الإسلامي وأدلته للزحيلي ٧/‏٥١٦٠ — وهبة الزحيلي (ت ١٤٣٦)

ويبدو لهذا العبد الضعيف عفا الله عنه أنّ حق الاسم التجاري والعلامات التجارية، وإن كان في الأصل حقاً مجرّداً غير ثابت فى عين قائمة، ولكنه بعد التسجيل الحكومي الذي يتطلب جهداً كبيراً وبَدْلَ أموال جمّة، والذى تحصل له بعد ذلك صفة قانونية تمثلها شهادات مكتوبة بيد الحامل وفى دفاتر الحكومة، أشبه الحق المستقر في العين، والتحق في عرف التجار بالأعيان، فينبغى أن يجوز الاعتياض عنه على وجه البيع أيضاً، (فقه البيوع  277-1)

[3] https://www.islamweb.net/ar/fatwa/48623/%D9%85%D9%88%D9%82%D9%81%D8%A7%D9%84%D8%B4%D8%B1%D9%8A%D8%B9%D8%A9%D9%85%D9%86%D8%A8%D9%8A%D8%B9%D8%A7%D9%84%D8%A7%D8%B3%D9%85-%D8%A7%D9%84%D8%AA%D8%AC%D8%A7%D8%B1%D9%8A