கணவனின் இந்திரியத்தை மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்தி கருத்தரிக்க வைத்தல் தொடர்பான மார்க்க விளக்கம்
Question
Fatwa
004/ACJU/F/2008
2008.01.15 (1429.01.05)
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
குழந்தைப் பாக்கியம் என்பது அல்லாஹ்வினால் வழங்கப்படும் மிகப் பெரும் வெகுமதியாகும். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விபரிக்கின்றான்.
“வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கின்றான்; அல்லது ஆண் மக்களையும் பெண் மக்களையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். மிக்க ஆற்றலுடையவன்.” (அஷ்-ஷூரா : 49, 50)
எனவே, அல்லாஹ்வின் அருட்கொடையாகிய குழந்தைகளை அவனிடமே எதிர்பார்ப்பது அடியார்களின் கடமையாகும். வழமையான முறைப்படி குழந்தையைப் பெற்றெடுக்காதவர்கள் செயற்கையாக கருத்தரிக்கவைக்கும் முறைப்படி கணவனின் இந்திரியத்தை மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்தி கருத்தரிக்க வைப்பதும் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.
‘செயற்கையாக கருத்தரிக்க வைக்கும் முறையாகிறது உடலுறவின்றி ஆணின் இந்திரியத்தை பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்துவதாகும். அது கணவனின் இந்திரியத்தை மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்துவதாக இருந்தால் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகும். (அல்-பிக்ஹுல் இஸ்லாமி வ அதில்லத்துஹ் – பாகம்: 04, பக்கம்: 2649)
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் டப்ளியு. தீனுல் ஹஸன்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

