பெண்களுக்கான வகுப்புகளை மஸ்ஜித்களில் நடாத்துவது தொடர்பான மார்க்க விளக்கம்
Question
Fatwa
ACJU/FTW/2026/36-653
2026.07.14 (1447.01.28)
பதில்: மஸ்ஜித் என்பது அல்லாஹ்வைத் துதிப்பதற்கும், அவனை வணங்குவதற்கும், தொழுகைகளை நிறைவேற்றுவதற்கும் மார்க்க அறிவைக் கற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் மேலும் நன்மையையும் இறையச்சத்தையும் ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொள்வதற்குமான புனிதமான இடமாகும். எனவே, மஸ்ஜிதின் புனிதத் தன்மையும் அதற்குரிய ஷரீஆ ஒழுங்குகளும் எப்போதும் பேணப்படல் வேண்டும்.
மஸ்ஜித்களைப் பொருத்தவரையில்,
1. மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்ட இடங்கள்,
2. மஸ்ஜிதின் நலனுக்காக வக்ஃப் செய்யப்பட்ட இடங்கள்,
3. வக்ஃப் செய்யப்படாமல் தொழுகைக்காகப் பயன்படுத்தப்படும் இடங்கள் எனப் பல வகைகளாகக் காணப்படுகின்றன. அந்த வகையில்,
1. முதலாவது வகை: மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்ட இடங்களை தொழுகை, இஃதிகாஃப், அல்லாஹ்வைத் துதித்தல், அல்-குர்ஆன் ஓதுதல், கற்றுக் கொடுத்தல், கற்றுக் கொள்ளல் மற்றும் நன்மையான விடயங்களை ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொள்ளல் போன்ற மார்க்கக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.1 இவ்வாறான மஸ்ஜித்களில் மாதவிடாய் நிலையில் உள்ள பெண்களும், பிள்ளைப் பேற்றுக்குப் பிந்தைய இரத்தப் போக்கு (நிஃபாஸ்) நிலையில் உள்ள பெண்களும் நுழைவதற்கோ அல்லது அங்கு தங்கியிருப்பதற்கோ மார்க்கத்தில் அனுமதி இல்லை.2
இதனைப் பின்வரும் ஹதீஸ் தொளிவுபடுத்துகின்றது:
عن عَائِشَةَ رضى الله عنها: … قال رسول لله صلى لله عليه وسلم فَإِنِّي لاَ أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلاَ جُنُبٍ (سنن أبي داود -232)
“உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கும், குளிப்புக் கடமையானவருக்கும் நான் பள்ளிவாசலை ஆகுமானதாக ஆக்க மாட்டேன்.” (ஸுனன் அபீதாவூத் – 232)
2. இரண்டாவது வகை: மஸ்ஜிதின் நலனுக்காக வக்ஃப் செய்யப்பட்ட இடங்கள்.
3. முன்றாவது வகை: வக்ஃப் செய்யப்படாமல் தொழுகைக்காகப் பயன்படுத்தப்படும் இடங்கள்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையான இடங்களில் இஃதிகாஃப் இருப்பதைத் தவிர தொழுகை உட்பட ஏனைய மார்க்கக் காரியங்களையும், பொதுநல நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு அனுமதி உண்டு.
மேற்குறிப்பிட்ட அடிப்படைகளின் படி, பெண்களுக்கான வகுப்புகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அனைத்துப் பெண்களும் எந்தவிதத் தடையும் இன்றி கலந்து பயன்பெறும் வகையில், முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்ட இடங்களில் நடாத்தாமல், மஸ்ஜிதின் வளாகத்தில் உள்ள மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்படாத கட்டிடங்களிலோ அல்லது பொறுத்தமான வேறு இடங்களிலோ நடாத்துவது மிகவும் பொருத்தமானதாகும்.
மேலும், பெண்கள் பெருந்தொடக்கு, மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்றுக்குப் பிந்தைய இரத்தப் போக்கு (நிஃபாஸ்) நிலைகளில் இருக்கும் போது, அல்-குர்ஆனைத் தொடுவதற்கும் ஓதுவதற்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை. எனினும், அவை தவிர்ந்த ஏனைய தீனுடைய அறிவுகளையும் மார்க்க விடயங்களையும் கற்றுக் கொள்வதில் எவ்விதத் தடையும் இல்லை.
மாதவிடாய் நிலையில் உள்ள பெண்கள் அல்-குர்ஆனை ஓதுவது தொடர்பான விரிவான மார்க்க விளக்கத்தை, கீழ்வரும் இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
[1] إِنَّ رَجُلًا نَشَدَ فِي الْمَسْجِدِ فَقَالَ مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الْأَحْمَرِ فَقَالَ النَّبِيُّ ﷺ (لَا وَجَدْتَ إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ) (صحيح مسلم – 569) وَقَوْلُهُ ﷺ إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ مَعْنَاهُ لِذِكْرِ اللَّهِ تَعَالَى وَالصَّلَاةِ وَالْعِلْمِ وَالْمُذَاكَرَةِ فِي الْخَيْرِ وَنَحْوِهَا — شرح النووي على مسلم – النووي (٥/٥٤)
[2] يَحْرُمُ عَلَى الْحَائِضِ وَالنُّفَسَاءِ مَسُّ الْمُصْحَفِ وَحَمْلُهُ وَاللُّبْثُ فِي الْمَسْجِدِ وَكُلُّ هَذَا مُتَّفَقٌ عَلَيْهِ عِنْدَنَا (شرح المهذب 2/358)

