முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கான ஸகாத் தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

முட்டை விற்பனையை மாத்திரம் பிரதான நோக்காகக்கொண்டு கோழிப் பண்ணை செய்பவரின் பண்ணைக்குரிய ஸகாத்தினை எவ்வாறு கணக்கிட வேண்டும்?

Fatwa

ACJU/FTW/2025/14-596
2025.07.03 (1447.01.07)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸகாத் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். அது விவசாயப் பொருட்கள், தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், புதையல் மற்றும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் கனியங்கள் மற்றும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடையகளில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் கடமையாகிறது.

அவ்வகையில் வியாபாரப் பொருட்களில் ஸகாத் கடமையாகுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் காணப்பட வேண்டும்:

1. குறிப்பிட்ட பொருளை விலை கொடுத்து வாங்கியிருத்தல் வேண்டும்.1
• அவ்வகையில் அன்பளிப்பாக அல்லது அனந்தரமாகக் கிடைத்த பொருட்கள் மீது ஸகாத் கடமையாக மாட்டாது.

2. ஒரு பொருளை கொள்வனவு செய்யும் போது அப்பொருளை விற்று இலாபம் பெறும் நோக்கம் இருத்தல் வேண்டும். இதனடிப்படையில்,
• வியாபார நோக்கோடு ஒரு பொருளை கொள்வனவு செய்து அது விற்பனை செய்யப்படும் வரை பயன்படுத்தப்பட்டாலும் அதில் ஸகாத் கடமையாகிவிடும்.2

• ஒரு பொருளை பாவனை நோக்கோடு மாத்திரம் கொள்வனவு செய்யப்பட்டிருப்பின் அதன் மீது ஸகாத் கடமையாக மாட்டாது.

• ஒரு பொருளை கொள்வனவு செய்யும் போது ‘பாவனை செய்து விட்டு விற்று விடுவேன்’ என்ற நோக்கம் இருந்தால் அப்பொருள் மீது ஸகாத் கடமையாக மாட்டாது.3

ஆகவே, ஒருவர் ஒரு பொருளை வாங்கும் போது அதனை விற்று இலாபம் பெறும் நோக்கில் வாங்கியிருந்தால் அப்பொருள் ஸகாத் கொடுக்க வேண்டிய வியாபார பொருளாகக் கருதப்படும்.

எனினும், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் போது அதனை பாவித்து விட்டு விற்றல், அல்லது அதிலிருந்து பிரயோசனம் அடைந்த பின்னர் விற்றல் போன்ற நோக்கங்களுடன் வாங்கியிருந்தால் அவற்றில் ஸகாத் கடமையாகமாட்டாது.4

எனவே, கோழிக் குஞ்சுகளை கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு அவற்றை விற்காமல் முட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருப்பதனால் அக்கோழிகள் மீது ஸகாத் கடமையாக மாட்டாது.

அவ்வாறே, அக்கோழிகள் மூலம் கிடைக்கும் முட்டைகள் மீதும் ஸகாத் கடமையாக மாட்டாது. ஏனெனில், அவை பகரம் ஒன்றினைக் கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல.

எனினும், முட்டைகளை விற்றுப் பெறும் பணமும், குறித்த காலத்தின் பின்னர் கோழிகளை விற்றுப் பெறும் பணமும் ஸகாத் கடமையாகும் நிஸாபினை அடைந்து ஒரு வருட காலமும் பூர்த்தியாக இருந்தால் அதில் பணத்திற்கான ஸகாத் கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

————-

[1] وإنما يصير العرض للتجارة إذا اقترنت نيتها بكسبه بمعاوضة كشراء وكذا المهر وعوض الخلع في الأصح لا بالهبة والاحتطاب والاسترداد بعيب (منهاج الطالبين )

[2] لَوْ لَبِسَ ثَوْبَ تِجَارَةٍ بِغَيْرِ نِيَّةِ الْقَنِيَّةِ فَإِنَّهُ لَا تَسْقُطُ فِيهِ الزَّكَاةُ بِالِاتِّفَاقِ (المجموع شرح المهذب – ط المنيرية ٥/‏٣٥٩ — النووي (ت ٦٧٦)

وَالتِّجَارَةُ: هِيَ التَّقْلِيبُ بِقَصْدِ الْأَرْبَاحِ وَلَمْ يُوجَدْ ذَلِكَ، فَلَوْ لَبِسَ ثَوْبَ تِجَارَةٍ بِلَا نِيَّةِ قُنْيَةٍ فَهُوَ مَالُ تِجَارَةٍ، فَإِنْ نَوَاهَا بِهِ فَلَيْسَ مَالَ تِجَارَةٍ، وَقَضِيَّةُ إطْلَاقِ الْمُصَنِّفِ: أَنَّهُ لَا فَرْقَ بَيْنَ أَنْ يَقْصِدَ بِنِيَّتِهَا اسْتِعْمَالًا جَائِزًا أَوْ مُحَرَّمًا كَلُبْسِ الدِّيبَاجِ وَقَطْعِ الطَّرِيقِ بِالسَّيْفِ، وَهُوَ كَذَلِكَ كَمَا هُوَ أَحَدُ وَجْهَيْنِ فِي التَّتِمَّةِ يَظْهَرُ تَرْجِيحُهُ. (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ٢/‏١٠٦ — الخطيب الشربيني (ت ٩٧٧)

[3] بِخِلَافِ عَرْضِ الْقِنْيَةِ لَا يَصِيرُ لِلتِّجَارَةِ بِنِيَّةِ التِّجَارَةِ؛ لِأَنَّ الْقِنْيَةَ الْحَبْسُ لِلِانْتِفَاعِ وَالنِّيَّةَ مُحَصِّلَةٌ لَهُ وَالتِّجَارَةَ التَّقْلِيبُ بِقَصْدِ الْإِرْبَاحِ وَالنِّيَّةُ لَا تُحَصِّلُهُ عَلَى أَنَّ الِاقْتِنَاءَ هُوَ الْأَصْلُ فَكَفَى أَدْنَى صَارِفٍ إلَيْهِ كَمَا أَنَّ الْمُسَافِرَ يَصِيرُ مُقِيمًا بِالنِّيَّةِ عِنْدَ جَمْعٍ وَالْمُقِيمَ لَا يَصِيرُ مُسَافِرًا بِهَا اتِّفَاقًا (تحفة المحتاج )

[4] دار الإفتاء المصرية:

https://www.daralifta.org/ar/fatwa/details/12978/%D8%AD%D9%83%D9%85%D8%A7%D9%84%D8%B2%D9%83%D8%A7%D8%A9%D8%B9%D9%84%D9%89%D9%86%D8%B4%D8%A7%D8%B7%D8%B5%D9%86%D8%A7%D8%B9%D8%A9%D8%A7%D9%84%D8%AF%D9%88%D8%A7%D8%AC%D9%86

الإسلام ويب:

https://www.islamweb.net/ar/fatwa/2628/