மஹ்ரமான ஆண் இன்றி ஒரு பெண் பெண்களுடைய கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்வது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

ACJU FATWA

Question

மஹ்ரமான ஆண் இன்றி ஒரு பெண் பெண்களுடைய கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்ய முடியுமா?

Fatwa

2015.08.15

அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகளை மனிதன் நிறைவேற்றுவதற்கு அந்த வணக்கங்களுக்கேற்ப குறிப்பிட்ட சில நிபந்தனைகள் உள்ளன. அதனடிப்படையில் ஒரு பெண் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமானால் அவள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய ஏதாவதொரு வழியைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் ஹஜ் கடமை நீண்ட பிரயாணம், குறிப்பிட்ட காலம், அதிகளவிலான பணம் போன்றவற்றுடன் தொடர்புபடுகின்றது. ஒரு பெண் நீண்ட பயணம் செய்வதாக இருந்தால் அவளுடன் அவளுக்கு மஹ்ரமான ஆண் இருப்பது அவசியமாகும்.

இதைப் பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கின்ற ஒரு பெண்ணுக்கு அவளுடன் ஒரு மஹ்ரமானவர் இன்றி ஒரு பகல் ஒரு இரவு பயணம் செய்யும் தூரம் அவள் பிரயாணம் செய்வது ஹலாலாகமாட்டாது” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினாரகள்.
நூல்: சஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 1088)

இதே போன்று ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருப்பதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம். மேலும் ஒரு பெண் அவளுடன் ஒரு மஹ்ரம் இருந்தேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! இன்ன இன்ன யுத்தத்தில் நான் பதிவு செய்துள்ளேன், எனது மனைவி ஹஜ் செய்ய வெளியாகியுள்ளார் என கூறினார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீர் சென்று உமது மனைவியுடன் ஹஜ் செய்வீராக எனக் கூறினார்கள்.
(நூல்: சஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 3006)

கணவன் அல்லது மஹ்ரமான ஆணைப் பெற்றுக்கொள்ளாத ஒரு பெண் நம்பகமான பெண்களுடைய கூட்டத்துடன் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லலாம் என முற்கால மார்க்க மேதைகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். எனினும் தற்காலத்தில் பெண் தனது கணவன் அல்லது தனக்கு மஹ்ரமான ஆணின் துணையின்றி ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதால் பல அசௌகரியங்களைச் சந்திக்கின்றாள். அவளுக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் அளிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்படுகின்றது.

இவைகளைக் கவனத்திற்கொண்டு தற்கால அறிஞர்கள் கணவன் அல்லது மஹ்ரமான ஆணைப் பெற்றுக்கொள்ளாத ஒரு பெண் நம்பகமான பெண்களுடைய கூட்டத்துடன் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வது ஆகுமானதல்ல என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

*ACJU FATWA*