இலங்கையிலுள்ள முன்னணி இந்து அமைப்புகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள், 2026 செப்டம்பர் 23 அன்று, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நிந்தனை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சவூதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் என்ற நபரின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்திடம் ஜம்இய்யா சார்பில் கோரிக்கையொன்றை முன்வைக்குமாறு கோரி இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, வருகை தந்திருந்த குருமார்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்த நபரின் பக்குவமற்ற செயலுக்காக தங்களது வருத்தத்தையும் மன்னிப்பையும் முதற்கண் தெரிவித்துக் கொண்டதுடன், இவ்வாறான பிழையான செயற்பாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு, குறித்த நபரின் அறியாமையினால் ஏற்பட்ட இந்த தவறை மன்னித்து அவருக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க அல்லது தண்டனையை குறைக்க, தம்மால் முடியுமான பங்களிப்பை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தரப்பு மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.
மேலும் இச்சந்திப்பில், பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் சகவாழ்வு, இனங்களிடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான முயற்சிகளை சமய அமைப்புகள் என்ற ரீதியில் அனைத்து தரப்பும் இணைந்து மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில், அகில இலங்கை இந்து மாமன்றம், சர்வதேச இந்து மகா சபை, இலங்கை பிராமணர் குருக்கள் சங்கம், இந்து குருமார்கள் சங்கம் மற்றும் சர்வதேச இந்து மத பீடம் ஆகிய இந்து அமைப்புகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஜம்இய்யா சார்பில், உப தலைவர், பொதுச் செயலாளர், உப செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.








– ACJU Media –


