மஸ்ஜிதில் தொழுகை நடாத்தப்பட்டு வந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மலசல கூடத்தைப் பயன்படுத்துவது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2024/30-62/ORG-02

Question

மஸ்ஜிதின் மேல் மாடியில் பெண்களுக்கான மலசல கூடம் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு சுமார் ஐந்து வருடங்கள் தராவீஹ் தொழுகைக்கு வரும் பெண்களால் பாவிக்கப்பட்டது. ஆனால் இமாம் அவர்கள் கீழ் மாடியில் தொழுகை நடத்தும் பொழுது மேல் மாடியில் பெண்கள் மலசல கூடத்தை பயன்படுத்துவது பொருத்தமில்லை என்ற ஒர் அபிப்பிராயத்தின் அடிப்படையில் பாவிக்கப்பட்டு வந்த குறிப்பிட்ட மலசல கூடம் தற்போது மூடி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத் திட்டமாக வேறோர் இடத்தில் இந்த மலசல கூடத்தை அமைப்பதற்குரிய நிலைமை தற்பொழுது இல்லாத காரணத்தினால், குறிப்பிட்ட இடத்தை இந்த ரமழானின் போது பெண்களுக்கு பாவிப்பதற்கு அனுமதிக்க முடியுமா என்ற ஆலோசனையை எமக்கு எமது மஸ்ஜிதுக்கு வந்து பிரிசீலித்து தந்துதவுமாறு மிகப் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

Fatwa

ACJU/FTW/2024/30-62/ORG-02
2024.08.08 – 1446.02.02  

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்ட இடம் அல்லாஹ்வை துதிசெய்வதற்கும், வணங்குவதற்கும், தொழுவதற்கும், கற்றுக்கொள்வது மற்றும் கற்றுக்கொடுப்பதற்கும், நல்ல விடயங்களை ஒருவருக்கொருவர் ஞாபகமூட்டிக் கொள்வதற்கும் அது போன்ற நன்மையான விடயங்களை மேற்கொள்வதற்கும் உள்ள ஓர் இடமாகும்.1

அவ்விடத்தை மலசல கூடம் அமைத்தல் போன்ற வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த மார்க்கத்தில் அனுமதி கிடையாது.2

அந்த வகையில் மஸ்ஜிதில் மேல் மாடியிலுள்ள மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ள பகுதி, மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்டிருந்தால் அவ்விடம் தொழுகைக்காக வேண்டியே பயன்படுத்தப்படல் வேண்டும். வேறு தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்த முடியாது.

எனினும், ஓர் இடம் மஸ்ஜிதுடைய நலனுக்காக வக்ஃப் செய்யப்பட்டிருந்தால், அவ்விடத்தில் மலசல கூடம் அமைத்தல், கடைகளைக் கட்டுதல் போன்ற மஸ்ஜிதுடைய நலனுக்கான காரியங்களில் பயன்படுத்த அனுமதியுள்ளது.

எனவே, மேற்குறித்த சட்டதிட்டங்களின் அடிப்படையில் குறித்த இடம் எவ்வடிப்படையில் வக்ஃப் செய்யப்பட்டுள்ளது என்ற தெளிவைப் பெற்று இவ்விடயத்தை கையாளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

[1]  وَأَجَازَ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ مِنْ أَصْحَابِ مَالِكٍ رَحِمَهُ اللَّهُ تَعَالَى رَفْعَ الصَّوْتِ فِيهِ بِالْعِلْمِ وَالْخُصُومَةِ وَغَيْرِ ذَلِكَ مِمَّا يَحْتَاجُ إِلَيْهِ النَّاسُ لِأَنَّهُ مَجْمَعُهُمْ وَلَا بُدَّ لَهُمْ مِنْهُ وَقَوْلُهُ ﷺ إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ مَعْنَاهُ لِذِكْرِ اللَّهِ تَعَالَى وَالصَّلَاةِ وَالْعِلْمِ وَالْمُذَاكَرَةِ فِي الْخَيْرِ وَنَحْوِهَا… فَأَمَّا الصَّنَائِعُ الَّتِي يَشْمَلُ نَفْعُهَا الْمُسْلِمِينَ فِي دِينِهِمْ كَالْمُثَاقَفَةِ وَإِصْلَاحِ آلَاتِ الْجِهَادِ مِمَّا لَا امْتِهَانَ لِلْمَسْجِدِ فِي عَمَلِهِ فَلَا بَأْسَ بِهِ. (شرح النووي على مسلم ٥/‏٥٥ — النووي (ت ٦٧٦)

[2]  يَحْرُمُ الْبَوْلُ فِي الْمَسْجِدِ فِي غَيْرِ إنَاءٍ: وَأَمَّا فِي الْإِنَاءِ فَفِيهِ احْتِمَالَانِ لِابْنِ الصَّبَّاغِ ذَكَرَهُمَا فِي بَابِ الِاعْتِكَافِ أَحَدُهُمَا الْجَوَازُ كَالْفَصْدِ وَالْحِجَامَةِ فِي إنَاءٍ: وَالثَّانِي التَّحْرِيمُ لِأَنَّ الْبَوْلَ مُسْتَقْبَحٌ فَنُزِّهَ الْمَسْجِدُ مِنْهُ وَهَذَا الثَّانِي هُوَ الَّذِي اخْتَارَهُ الشَّاشِيُّ وَغَيْرُهُ وَهُوَ الْأَصَحُّ الْمُخْتَارُ   (المجموع شرح المهذب)