முஸ்லிமான ஒருவர் வேதக்காரப் பெண்ணை திருமணம் செய்வது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2017/27-304

Question

முஸ்லிமான ஒருவர் வேதக்காரப் பெண்ணை திருமணம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

Fatwa

ACJU/FTW/2017/27-304
2017.09.19 – 1438.12.27

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

திருமணம் என்பது ஒரு முஸ்லிமான ஆண் ஒரு முஸ்லிமான பெண்ணை வலீ, சாட்சி, மற்றும் மஹ்ர் மூலம் தாம்பத்திய வாழ்விற்கு ஹலாலான பெண்ணாக ஆக்கிக் கொள்வதாகும்.

பொதுவாக முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது போன்ற விடயங்களை இஸ்லாம் அனுமதித்தாலும், ஒரு முஸ்லிமான பெண் அல்லது ஆண் முஸ்லிமல்லாத ஓர் ஆணை அல்லது பெண்ணைத் திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை.

இது பற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

‘(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஈமான் கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.

அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் ஈமான் கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும். ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன். (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.’ (அல்-பகரஹ்-221)

என்றாலும், அல்-குர்ஆன் இறங்குவதற்கு முன்னுள்ள, மாற்றங்கள், திரிபுகள் செய்யப்படாத, உண்மை நிலையில் உள்ள, தௌராத் அல்லது இன்ஜீலைப் பின்பற்றும் வேதக்கார பரம்பரையைச் சேர்ந்த யூத, கிறிஸ்தவப் பெண்களை இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்வதற்கு அனுமதியுண்டு.

அப்பெண் உண்மையான வேதக்கார பரம்பரையைச் சேர்ந்தவர் எனும் விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது அப்பரம்பரையைச் சார்ந்த பெண் அல்ல1 என்பது உறுதியாகத் தெரிந்தால் அவளைத் திருமணம் செய்வது ஹராமாகும்.2

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – பத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

              

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி 
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

————————————————————————

[1]  (فَالْأَظْهَرُ حِلُّهَا) لِلْمُسْلِمِ (إنْ عَلِمَ دُخُولَ قَوْمِهَا) أَيْ آبَائِهَا أَيْ أَوَّلِهِمْ أَيْ أَوَّلِ مَنْ تَدَيَّنَ مِنْهُمْ (فِي ذَلِكَ الدِّينِ) أَيْ دِينِ مُوسَى وَعِيسَى – عَلَيْهِمَا الصَّلَاةُ وَالسَّلَامُ – (قَبْلَ نَسْخِهِ وَتَحْرِيفِهِ) لِتَمَسُّكِهِمْ بِذَلِكَ الدِّينِ حِينَ كَانَ حَقًّا، وَمِنْهُمْ مَنْ قَطَعَ بِهَذَا كَمَا يُقِرُّونَ بِالْجِزْيَةِ قَطْعًا ” فصل في نكاح من تحل – مغنى المحتاج”

وَخَرَجَ بِعَلِمَ مَا لَوْ شَكَّ هَلْ دَخَلُوا قَبْلَ التَّحْرِيفِ أَوْ بَعْدَهُ أَوْ قَبْلَ النَّسْخِ أَوْ بَعْدَهُ فَلَا تَحِلُّ مُنَاكَحَتُهُمْ وَلَا ذَبَائِحُهُمْ أَخْذًا بِالْأَحْوَطِ ” ( فَصْلٌ ) فِي حِلِّ نِكَاحِ الْكَافِرَةِ وَتَوَابِعِهِ – تحفة المحتاج”

[2] وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ    (البقرة : 221)