ACJU/FTW/2020/09-393
2020.06.10 (1441.10.18)
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
01. ஒரு முஸ்லிமுக்கு திருமணம் முடிப்பதற்கான தேவை ஏற்பட்டு அதற்கான சக்தியும் இருக்குமாயின் அதனை நிறைவேற்றிக் கொள்ளவது சுன்னத்தாகும்.1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (மஹ்ரமில்லாத பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். இன்னும் கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் ஆசையைக் கட்டுப்படுத்தும் கேடயமாகும்.’ (புகாரி : 1905)2
அத்துடன் திருமணம் சம்பந்தமான முழுமையான வழிகாட்டல்களையும் வரையறைகளையும் இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது. அவற்றில். திருமணம் ஒன்று செல்லுபடியாகுவதற்கு தகுதியான வலீ, தகுதியான இரு சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடாத்தி வைப்பது அவசியமாகும்.
1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தொகுப்பும் இவை அவசியம் என்று குறிப்பிடுகிறது. இவற்றை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
‘எந்தப் பெண்ணாவது தனது வலிய்யுடைய அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் அவளது திருமணம் (Bபாத்தில்) செல்லுபடியற்றதாகும், அவளது திருமணம் (Bபாத்தில்) செல்லுபடியற்றதாகும், அவளது திருமணம் (Bபாத்தில்) செல்லுபடியற்றதாகும்’ என்று (மூன்று தடவை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். (திர்மிதீ : 1102)
‘இரண்டு நீதமான சாட்சிகளும், வலிய்யும் இல்லாமல் திருமணம் இல்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்-அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். (திர்மிதீ : ஹதீஸ் எண் : 1101)
02. இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் உட்பட பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி, இஸ்லாத்தில் ஒரு திருமணம் செல்லுபடியாகுவதற்கு ‘வலீ’ திருமண சபையில் பிரசன்னமாகி, திருமணத்தை நடாத்தி வைத்தல் வேண்டும். அல்லது அத்திருமணத்தை நடாத்தி வைக்கும் அதிகாரத்தை இன்னும் ஒரு முஸ்லிமான, பருவ வயதை அடைந்த, புத்தி சுயாதீனமுடைய, மார்க்கத்தில் பேணுதல் உள்ள ஒருவரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
குறித்த இச்சட்டம், கன்னிப் பெண் மற்றும் விதவைப் பெண் ஆகிய இருவருக்கும் சமமானதாகும். என்றாலும், விதவைப் பெண்ணாக இருந்தால் அவளுடைய அனுமதியின் பின்பே திருமணம் முடித்து வைப்பது அவசியமாகும்.3
03. இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் போன்ற சில அறிஞர்களின் கருத்தின்படி, வயது வந்த புத்தியுள்ள ஒரு பெண்ணின் திருமணம் செல்லுபடியாகுவதற்கு வலிய்யுடைய அனுமதி அவசியமில்லை. என்றாலும், வலிய்யுடைய அனுமதியுடன் திருமணம் செய்வது சிறந்ததும் ஏற்றமானதுமாகும் என்றும், வலிய்யுடைய அனுமதியின்றித் திருமணம் செய்வது இகழத்தக்க செயல் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.4
மேலும், ஹனபி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துப்படி, ஒரு பெண் பொருத்தமற்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு, வலீ காழியின் மூலம் அவளைப் பிரித்து வைப்பார். இது ஹனபி மத்ஹபில் கன்னிப் பெண்ணுடைய சட்டமாகும்.5 என்றாலும், விதவைப் பெண்ணாக இருந்தால் வலிய்யின்றி இரு சாட்சிகளுடன் திருமணம் முடித்துக் கொள்வதற்கு அனுமதியுள்ளது.
04. இலங்கை நாட்டின், 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 25இன் பிரகாரம் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த பெண், திருமணம் முடிப்பதாயின் வலிய்யின் அனுமதி அவசியமாகும். ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள், தமது மத்ஹபின் அடிப்படையில் திருமணம் முடிப்பதற்கு அனுமதியுள்ளது.
மேலும், இலங்கை முஸ்லிம்கள் அடிப்படையில் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் என்றும், வேறு மத்ஹபைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் அதை நிரூபிப்பது அவசியமாகும் என்றும் இலங்கையின் அதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
05. ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து வைப்பதற்குத் தகுதியான ‘வலீ’களின் ஒழுங்குமுறை பின்வருமாறு:
1. தந்தை
2. தந்தையின் தந்தை அல்லது அவரது தந்தை
3. உடன் பிறந்த சகோதரன்
4. தந்தைவழிச் சகோதரன்
5. உடன் பிறந்த சகோதரனின் மகன்
6. தந்தைவழிச் சகோதரனின் மகன்
7. தந்தையின் உடன் பிறந்த சகோதரன்
8. தந்தையின் தந்தைவழிச் சகோதரன்
9. தந்தையின் உடன் பிறந்த சகோதரனின் மகன்
10. தந்தையின் தந்தை வழிச் சகோதரனின் மகன்
இவ்வொழுங்கு முறையில் முதல் தரத்தில் உள்ளவர் தகுதியானவராக இருக்கும் பொழுது, அவருக்கு அடுத்து வருபவர் வலிய்யாக இருக்க முடியாது.
06. ஒரு பெண்ணுக்கு வலிய்யாக மேற்கூறப்பட்டவர்களில் யாரும் இல்லையாயின் (சுல்தான்) அதிகாரத்தில் உள்ள தலைவர் அல்லது விவாக விவாகரத்து சம்பந்தமான விடயங்களுக்கு பொறுப்பாக்கப்பட்ட அதிகாரி வலிய்யாக இருக்கவேண்டும். இலங்கையின் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் படி, இவ்வதிகாரம் மணமகள் வசிக்கும் பிரதேசக் காழிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
07. தகுதிவாய்ந்த இரு சாட்சிகளின் விடயத்தில், மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இமாம் ஷாபிஈ மற்றும் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி திருமணம் செல்லுபடியாகுவதற்கு வலீ மற்றும் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருப்பது அவசியமாகும்.6
08. ஹனபி மத்ஹபில் வலீ இல்லாமல் திருமணம் முடிக்க அனுமதியிருந்தாலும், இரு சாட்சிகள் இன்றி நடைபெறும் திருமணம் ஹனபி மத்ஹப் உட்பட ஷாபிஈ மற்றும் பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி செல்லுபடியற்றதாகும். இவ்வாறு நடைபெற்ற திருமணத்தின் மூலம் இணைந்திருக்கும் தம்பதியினரின் உறவு விபச்சாரமாகும்.
09. இவ்வடிப்படையில், ஒரு பெண், வலீ மற்றும் தகுதிபெற்ற இரு சாட்சிகள் எதுவுமின்றி திருமணம் முடித்திருந்தால் அத்திருமணம் செல்லுபடியற்ற திருமணமாகும். அவர்களது தாம்பத்திய உறவு விபச்சாரமாகும்.
இதை 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 47 (2) உறுதிப்படுத்துகின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
———-
[1] (هُوَ مُسْتَحَبُّ لِمُحْتَاجٍ إلَيْهِ) بِأَنْ تَتُوقَ نَفْسُهُ إلَى الْوَطْءِ، وَلَوْ خَصِيًّا كَمَا اقْتَضَاهُ كَلَامُ الْإِحْيَاءِ (يَجِدُ أُهْبَتَهُ) وَهِيَ مُؤَنُهُ مِنْ مَهْرٍ وَكِسْوَةِ فَصْلِ التَّمْكِينِ، وَنَفَقَةِ يَوْمِهِ وَإِنْ كَانَ مُتَعَبِّدًا تَحْصِينًا لِدِينِهِ، وَلِمَا فِيهِ مِنْ بَقَاءِ النَّسْلِ وَحِفْظِ النَّسَبِ وَلِلِاسْتِعَانَةِ عَلَى الْمَصَالِحِ، وَلِخَبَرِ الصَّحِيحَيْنِ: «يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ» (مغنى المحتاج – كتاب النكاح)
[2] 1905 – حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ» بَابٌ: الصَّوْمُ لِمَنْ خَافَ عَلَى نَفْسِهِ العُزْبَةَ – كتاب الصوم – صحيح البخاري)
[3] وَلِلْأَبِ تَزْوِيجُ الْبِكْرِ صَغِيرَةً أَوْ كَبِيرَةً بِغَيْرِ إذْنِهَا، وَيُسْتَحَبُّ اسْتِئْذَانُهَا، وَلَيْسَ لَهُ تَزْوِيجُ ثَيِّبٍ إلَّا بِإِذْنِهَا (كتاب النكاح – منهاج الطالبين)
[4] وحاصل ما عن علمائنا رحمهم الله في ذلك سبع روايات : روايتان : عن أبي حنيفة تجوز مباشرة البالغة العاقلة عقد نكاحها ونكاح غيرها مطلقا إلا أنه خلاف المستحب وهو ظاهر المذهب. (باب الأولياء والأكفاء – شرح فتح القديرعلى الهداية شرح بداية المبتدي)
يُسْتَحَبُّ لِلْمَرْأَةِ تَفْوِيضُ أَمْرِهَا إلَى وَلِيِّهَا كَيْ لَا تُنْسَبَ إلَى الْوَقَاحَةِ بَحْرٌ وَلِلْخُرُوجِ مِنْ خِلَافِ الشَّافِعِيِّ فِي الْبِكْرِ. (باب الولي – كتاب النكاح – حاشية ابن عابدين على الدر المحتار رد المحتار)
[5] وله) أي للولي (إذا كان عصبة) ولو غير محرم كابن عم في الأصح خانية، وخرج ذوو الأرحام والأم والقاضي (الاعتراض في غير الكفء) فيفسخه القاضي ويتجدد بتجدد النكاح (ما لم) يسكت حتى (تلد منه) لئلا يضيع الولد وينبغي إلحاق الحبل الظاهر به (ويفتى) في غير الكفء بعدم جوازه أصلا) وهو المختار للفتوى (لفساد الزمان) فلا تحل مطلقة ثلاثا نكحت غير كفء بلا رضا ولي بعد معرفته إياه فليحفظ (رد المحتار على الدر المختار)
[6] (وَلَا يَصِحُّ) النِّكَاحُ (إلَّا بِحَضْرَةِ شَاهِدَيْنِ) لِخَبَرِ ابْنِ حِبَّانَ فِي صَحِيحِهِ عَنْ عَائِشَةَ – رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا -: «لَا نِكَاحَ إلَّا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ، وَمَا كَانَ مِنْ نِكَاحٍ عَلَى غَيْرِ ذَلِكَ فَهُوَ بَاطِلٌ، فَإِنْ تَشَاحُّوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ» . قَالَ: وَلَا يَصِحُّ فِي ذِكْرِ الشَّاهِدَيْنِ غَيْرُهُ، وَالْمَعْنَى فِي اعْتِبَارِهِمَا الِاحْتِيَاطُ لِلْأَبْضَاعِ وَصِيَانَةُ الْأَنْكِحَةِ عَنْ الْجُحُودِ. (كتاب النكاح – فَصْلٌ فِي أَرْكَانِ النِّكَاحِ- مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)
الْحَنَفِيَّةُ وَالشَّافِعِيَّةُ ، وَالْمَشْهُورُ عَنْ أَحْمَدَ أَنَّهُ لاَ يَصِحُّ عَقْدُ النِّكَاحِ إِلاَّ بِإِشْهَادٍ عَلَى الْعَقْدِ ، لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ نِكَاحَ إِلاَّ بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ . وَرُوِيَ ذَلِكَ عَنْ عُمَرَ وَعَلِيٍّ ، وَهُوَ قَوْل ابْنِ عَبَّاسٍ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَجَابِرِ بْنِ زَيْدٍ وَالْحَسَنِ وَالنَّخَعِيِّ وَقَتَادَةَ وَالثَّوْرِيِّ وَالأَوْزَاعِيِّ .وَالْمَعْنَى فِيهِ صِيَانَةُ الأَنْكِحَةِ عَنِ الْجُحُودِ ، وَالاِحْتِيَاطِ لِلأْبْضَاعِ . (الإْشْهَادُ عَلَى النِّكَاحِ – الموسوعة الفقهية الكويتية)