பிள்ளையைப் பராமரிக்கும் உரிமை சம்பந்தமாக

FATWA # ACJU/FTW/2014/09/190

Question

இஸ்லாத்தில் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு தகுதியானவர் யார்?

Fatwa

ACJU/FTW/2014/09/190
20.05.2014 / 20.07.1435

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தனது காரியங்களைச் சுயமாகச் செய்ய முடியாத பிள்ளையைப் பாதுகாத்து சீராக வளர்ப்பதற்குப் பராமரித்தல் என்று சொல்லப்படும். பிள்ளையைப் பராமரிப்பதும், வளர்ப்பதும் அதன் தாய், தகப்பனது கடமையாகும். தாயும் தகப்பனும் பிரிந்து, தாய் உயிருடன் இருந்து மறுமணம் செய்யாதவிடுத்து அவளே அப்பிள்ளையை பராமரிப்பதற்கு உரிமையுடையவளாவாள்.

‘நபி ﷺ அவர்களிடம் ஒரு பெண்வந்து கூறினாள்: அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச்செல்ல நாடுகிறான் என்று கூறினாள். அப்பொழுது நபி ﷺ அவர்கள் ‘மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர், நூல்: அபூ தாவூத்)

தாய் மரணித்தல், பராமரிக்க மறுத்தல், பராமரிக்கத் தகுதியான பண்புகள் இல்லாமல் இருத்தல், மறுமணம் செய்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், அல்லது சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற நிலைமைகள் ஏற்படும் பொழுது தாய்க்கு அடுத்து உறவினர்களில் ஆண்களைவிட பெண்களே பராமரிக்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.

முக்னி அல்-முஹ்தாஜ் எனும் கிதாபில் ‘அல்-ஹளானா’ எனும் பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

( الإناث أليق بها ) لأنهن أشفق وأهدى إلى التربية وأصبر على القيام بها وأشد ملازمة للاطفال. “كتاب الحضانة, مغنى المحتاج”

பெண்களே அதற்கு தகுதியானவர்கள் ஏனெனில் அவர்கள் மிகவும் இரக்கமானவர்கள், பராமரிக்கத் தெரிந்தவர்கள், பொறுமையானவர்கள், அதிகமாகப் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பவர்கள்’.

எனவே, தாய்க்கு அடுத்து, தாயின் தாயே (உம்மம்மா) தகுதியானவர் என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். மேற்கூறிய அதே கிரந்தத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தாய்க்குப்பின் தாயின் பெண்வழித்தாய்களே தகுதியானவர்கள் (அதாவது தாயின் தாய் (உம்மம்மா) அல்லது பாட்டி’

பிள்ளைகளின் தாய் மேற்கூறப்பட்ட விடயங்களில் ஏதாவது ஒன்றின் காரணமாக அப்பிள்ளைகளைப் பராமரிக்கும் தகைமையை இழந்துவிட்டால், பிள்ளைகள் சுயமாக முடிவுகளை எடுக்கும், பிரித்தரியும் வயதை அடையும்வரை பராமரிக்கும் பொறுப்பு அப்பிள்ளையின் தாயின் தாய்க்கே உரித்தாகும்.

பிள்ளைகள் சுயமாக முடிவுகளை எடுக்கும், பிரித்தரியும் வயதை அடைந்தபின், அப்பிள்ளைகளின் விருப்பத்துக்கிணங்க, அவர்கள் தெரிவு செய்யும் தாய் அல்லது தந்தையிடம் இருத்தல் வேண்டும். இருவரையும் விரும்பினால் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுபவரிடம் இருத்தல் வேண்டும்.

இருந்தாலும், அவர்கள் தாயைத் தெரிவு செய்யும் பட்சத்தில் அவள் மறுமணம் செய்திருந்தால், அல்லது தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் கெட்ட நடத்தை உள்ளவராக இருந்தால் மற்றவரிடம் அப்பிள்ளைகளை ஒப்படைத்தல் வேண்டும்.

இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்களின் ‘மின்ஹாஜுத் தாலிபீன’ எனும் கிதாபில் ‘அல்-ஹளானா’ எனும் பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

والمميز ان افترق أبواه كان عند من اختار منهما فإن كان في أحدهما جنون أو كفر أو رق أو فسق أو نكحت فالحق للآخر

‘பிரித்தரியும் வயதை அடைந்த பிள்ளை, அப்பிள்ளையின் தாயும், தகப்பனும் பிரியும் பட்சத்தில் அப்பிள்ளை தெரிவு செய்யும் தாய் அல்லது தகப்பனிடம் இருத்தல் வேண்டும். அவர்களில் ஒருவர் பைத்தியம் பிடித்தவராக, முஸ்லிம் அல்லாதவராக, அடிமையாக, அல்லது கெட்டவராக இருந்தால் அல்லது, தாய் மறுமணம் செய்துகொண்டால் மற்றவருக்கு பராமரிக்கும் உரிமை சென்றுவிடும்.’

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக (கஃபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம்சூரி
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா