அல்-குர்ஆன் மத்ரஸாக்களை ஊக்குவிப்பது தொடர்பில் கேகாலை மாவட்ட ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுக்கான விசேட கருத்தரங்கு

2026 மே 17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் நெறிப்படுத்தலில் கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் அப்பகுதி ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுக்கான விசேட கருத்தரங்கு கிருங்கதெனிய, மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலில் நடைபெற்றது.

அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் முக்கியத்துவத்தினை உணர்த்தி அவற்றை கேகாலை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

முதலில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகத்தினை வழங்கும் முகமாக, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் அவர்களால் ஜம்இய்யாவின் கட்டமைப்பு, உப பிரிவுகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் குறித்து விளக்கக் காட்சிகளுடன் தெளிவுகள் வழங்கப்பட்டன.

அதனை அடுத்து, அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா அவர்கள் அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தியதுடன் அதற்கான ஜம்இய்யாவின் முன்னெடுப்புகள் மற்றும் நடைமுறைத் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

அடுத்ததாக, ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் அவர்கள் அப்பிரிவு குறித்து தெளிவுபடுத்தியதுடன் அதன் தேவை குறித்தும் சுட்டிக் காட்டினார்.

குறித்த கருத்தரங்கில் பிரதான உரையினை நிகழ்த்திய ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், ‘தஜ்தீத்’ எனப்படும் ஜம்இய்யாவின் புதிய பயணத்திற்கமைய அல்-குர்ஆன் மத்ரஸா திட்டத்தினை வீரியமாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆர்வமூட்டியதுடன் அதன் முக்கியத்துவம் குறித்தும் தெளிவுகளை வழங்கினார்.

அத்தோடு, கேகாலை மாவட்டத்திலுள்ள பிராந்தியக் கிளைகளின் உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் தனித் தனிக் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதில், ஜம்இய்யா சார்பில் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஆளணியினர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன