ஸப்புகளில் நாட்காலிகளை வைப்பது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

எங்களது பள்ளிவாசல் ஸப்புகளில் மடிக்கக்கூடிய நாட்காலிகளை பயன்படுத்துவதற்கு யோசிக்கிறோம். இது பற்றிய மார்க்க விளக்கத்தை தரவும்!

Fatwa

ACJU/FTW/2025/32/614/ORG-02
2025.11.27 (1447.06.05)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு!

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பர்ளான தொழுகைகளை நின்று தொழுவதும், ஸுஜூத் செய்யும் போது நெற்றி, இரு கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்கள் ஆகிய ஏழு உறுப்புக்களை தரையில் வைத்திருப்பதும் கட்டாயமாகும்.

பர்ளான தொழுகையில் நின்று தொழுவதற்கும், தரையில் ஸுஜூத் செய்வதற்கும் முடியாதவர் தரையில் அமர்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அனுமதியுள்ளது. அவ்வாறே, தரையில் அமர முடியாதவர்களுக்கு நாற்காலியில் அமர்ந்து தொழுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்காலியில் அமர்ந்து தொழுவதன் சட்டங்களை இவ்விணைப்பில் பார்வையிடலாம்: https://www.acju.lk/ta/ftw-slh-chr-16/

மேலும், தரையில் அமர்ந்து தொழ முடியுமானவர்கள் நாட்காலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தரையில் அமர்ந்து தொழுவதே மிகச் சிறந்த முறையாகும்.

பர்ளான தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுபவர்கள் நாட்காலிகளைப் பயன்படுத்துவதாயின் பின்வரும் வழிகாட்டல்களைப் பேண வேண்டும்.

1. நாட்காலியில் அமர்ந்து பர்ளான தொழுகையை ஜமாஅத்தாக தொழுபவர்கள், ஸப்புகளில் இடைவிடாது நாற்காலிகளை சீராக வைத்திருத்தல். இவ்வாறு தொழுவதன் மூலமே ஜமாஅத் தொழுகையின் சிறப்பு கிடைக்கின்றது.1

2016.01.18 ஆம் திகதி ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட ‘கதிரையில் அமர்ந்து தொழுவதன்; சட்டங்கள்’ என்ற ஃபத்வாவில் ‘ஏனைய தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மஸ்ஜிதின் ஓரப்பகுதிகளில் கதிரைகளை வைத்துக் கொள்வது நல்லது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விளக்கம் ஸப்புகள் நிரம்பியிருக்கும் போது கதிரையில் அமர்ந்து தொழுபவர்கள் ஸப்பின் ஓரப்பகுதியில் தொழுவது சிறந்ததாகும்.

2. ஸப்புகளில் நாட்காலிகளை வைக்கும் பொழுது, அவற்றின் பின்பகுதியை ஸப்பின் கோட்டில் வைத்தல். இது பின் வரிசையில் தொழுகின்றவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வழிவகுக்கும்.

3. உட்கார்ந்து தொழுவதற்கு முடியுமான சிறிய நாட்காலிகளைப் பயன்படுத்தல்.

4. நிர்ப்பந்த நிலைகள் இல்லாத போது சாய்வுள்ள நாட்காலிகளைத் தவிர்த்தல்.2

அந்த வகையில், சாய்வில்லாத நாட்காலி மிகவும் பொருத்தமானதாகும். மேலும், தொழுகையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாய்வு கொண்ட நாட்காலியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இல.01 ல் குறிப்பிட்டுள்ளவாறு ஸப்புகளில் சேர்ந்து தொழுவதன் மூலமே ஜமாஅத் தொழுகையின் சிறப்பு கிடைப்பதனால், நாட்காலியில் அமர்ந்து தொழுபவர்களுக்காக மஸ்ஜிதின் ஒரு பகுதியை நிரந்தரமாக ஒதுக்கி வைக்காமல், நின்று தொழுபவர்களுடன் சேர்ந்து தொழ முடியுமான வகையில் ஏற்பாடுகளைச் செய்து கொள்ளல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

————————————-

[1] وَيُسَنُّ سَدُّ فُرَجِ الصُّفُوفِ، وَأَنْ لَا يُشْرَعَ فِي صَفٍّ حَتَّى يَتِمَّ الْأَوَّلُ وَأَنْ يُفْسَحَ لِمَنْ يُرِيدُهُ، وَهَذَا كُلُّهُ مُسْتَحَبٌّ لَا شَرْطٌ، فَلَوْ خَالَفُوا صَحَّتْ صَلَاتُهُمْ مَعَ الْكَرَاهَةِ  (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

مُخَالَفَةُ السُّنَنِ الْمَطْلُوبَةِ فِي الصَّلَاةِ مِنْ حَيْثُ الْجَمَاعَةُ مَكْرُوهَةٌ مُفَوِّتَةٌ لِلْفَضِيلَةِ. (حاشية الشرواني على تحفة المحتاج في شرح المنهاج)

[2] (وَلَوْ عَجَزَ عَنْ الْقِيَامِ) بِأَنْ يَلْحَقَهُ بِهِ مَشَقَّةٌ شَدِيدَةٌ أَوْ زِيَادَةُ مَرَضٍ أَوْ خَوْفُ الْغَرَقِ أَوْ دَوَرَانُ الرَّأْسِ فِي السَّفِينَةِ (قَعَدَ كَيْفَ شَاءَ وَافْتِرَاشُهُ أَفْضَلُ مِنْ تَرَبُّعِهِ فِي الْأَظْهَرِ) لِأَنَّهُ قُعُودُ عِبَادَةٍ بِخِلَافِ التَّرَبُّعِ، وَعَكْسُهُ وُجِّهَ بِأَنَّ الِافْتِرَاشَ لَا يَتَمَيَّزُ عَنْ قُعُودِ التَّشَهُّدِ بِخِلَافِ التَّرَبُّعِ. وَيَجْرِي الْخِلَافُ فِي قُعُودِ النَّفْلِ (وَيُكْرَهُ الْإِقْعَاءُ) فِي هَذَا الْقُعُودِ وَسَائِرِ قَعَدَاتِ الصَّلَاةِ (بِأَنْ يَجْلِسَ) الشَّخْصُ (عَلَى وَرِكَيْهِ)

قَوْلُهُ: (وَيُكْرَهُ الْإِقْعَاءُ) وَكَذَا مَدُّ الرِّجْلَيْنِ أَوْ إحْدَاهُمَا أَوْ تَقْدِيمُهَا عَلَى الْأُخْرَى مُعْتَمِدًا عَلَيْهَا كَالْمُتَرَوِّحِ . ((حاشية القليوبي على شرح المحلي)