Researched Fatwa
சுரக்ஷ மாணவர் காப்புறுதி தொடர்பான மார்க்க விளக்கம்
Question

Fatwa

ACJU/FTW/2018/02-323
2018.02.05-1438.05.18
கேள்வி: சுரக்ஷா மாணவர் காப்புறுதி ஒன்றை கடந்த 7அம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதன்படி எந்த மாணவரும் அதற்கான கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை. பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டவுடன் மாணவன் இறத்தல் மற்றும் பெற்றோர் இறத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் இக்காப்புறுதியின் ஊடாக இழப்பீட்டுத் தொகையை காப்புறுதிக் கூட்டுத் தாபனம் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளதோடு அது தொடர்பான விளம்பரங்களும் அனைத்துக் கல்வி வலயங்களிலும் முன்னெடுக்குமாறு கல்வியமைச்சு பணிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இணைக்கப்பட்டுள்ளது. பின்வரும் விடயங்கள் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாட்டை பலரும் வேண்டி நிற்கின்றனர்.
1. சுரக்ஷா காப்புறுதி தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு யாது.
2. இக்காப்புறுதியை பிரபலப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ள கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு யாது.?
3. இக்காப்புறுதியின் நன்மையை ஒரு மாணவர் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத காப்புறுதி முறைகளில், வட்டி போன்ற இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பல விடயங்கள் உள்ளன. இம்முறைகளில் ஒருவர் பணம் செலுத்தி அதன் மூலம் காப்புறுதி பெறுவது இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும்.
என்றாலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷ காப்புறுதித் திட்டத்தில் பாடசாலை மாணவர்களோ அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களோ காப்புறுதிக்காகக் கட்டணம் செலுத்தி, உடன்படிக்கை எதுவும் செய்வதில்லை, மாறாக அரசாங்கமே இதற்கென்று பணத்தை ஒதுக்கி மாணவர்களுக்காக காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்கிறது.
மேலும், இத்திட்டத்தின் படி, ஒரு மாணவன் இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது மாணவனின் பெற்றோர் இறந்தால் அதற்காக ஒரு தொகைப் பணத்தைக் குறித்த மாணவனுக்காக அரசாங்கம் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக வழங்குகிறது.
எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள இவ்விடயம் யதார்த்தத்தில் அரசாங்கம் செய்யும் உபகாரமாகவே கருதப்படுவதினால், அரசாங்க உபகாரங்களைப் பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – பத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா