தந்தையின் பெயரை நீக்கி விட்டு வளர்ப்புத் தந்தையின் பெயரை வைப்பது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2024/19/551/ORG - 02

Question

இஸ்லாத்தில் தந்தைக்குப் பகரமாக மற்றொருவரை தந்தை என அழைப்பதற்கோ அல்லது தந்தையென பெயர் இடுவதற்கோ முடியுமா?

Fatwa

ACJU/FTW/2024/19/551/ORG – 02
2024.05.08 -1445.10.29

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கு இஸ்லாம் அனுமதித்து அதற்குப் பல நன்மைகளையும் சில ஒழுங்கு முறைகளையும் வரையறைகளையும் வைத்துள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைத் இப்னு ஹாரிஸா (றழியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபியை சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது தத்தெடுத்து வளர்த்துள்ள விடயம் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் தனது பரம்பரையைப் பாதுகாப்பதும் இஸ்லாத்தின் அடிப்படைகளில் உள்ளதாகும். அந்தவகையில் ஒருவர் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்க்கும் போது இஸ்லாத்தின் பார்வையில் அந்தப் பிள்ளை தனது சொந்தப் பிள்ளையாக கருதப்படமாட்டாது. அவ்வாறே தத்தெடுத்து வளர்க்கக் கூடியவர் அந்தப் பிள்ளைiயின் தந்தையாகவும் கணிக்கப்பட மாட்டார்.

இது தொடர்பாக பின்வரும் அல் குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன:

وما جَعَلَ أدْعِياءَكُمْ أبْناءَكُمْ (الأحزاب : 4)

அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை.
(ஸூரத்துல் அஹ்ஸாப்: 04)

(الأحزاب : 5) ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ

நீங்கள் (தத்தெடுத்து வளர்த்த பிள்ளைகளை) அவர்களை அவர்களின் தந்தையாரின் பெயர்களைச் சொல்லி அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். (ஸூரத்துல் அஹ்ஸாப்: 05)

தத்தெடுத்தவர் வளர்ப்புப் பிள்ளைக்கு அவரது உண்மையான தந்தையை அறிமுகப்படுத்துவது கட்டாயமாகும். அவர்களை அழைக்கும் போதும் அவர்களது உண்மையான தந்தையைத் தவிர தத்தெடுத்தவரின் பெயரை இணைத்து அழைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது. ஏனெனில் மறுமைநாளில் ஒருவர் தனது தந்தையின் பெயருடன் இணைத்தே அழைக்கப்படுவார்.

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு, ‘இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)’ என்று கூறப்படும். (நூல்: ஸஹீஹுல் புஹாரீ: 6177)

இமாம் புஹாரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறித்த ஹதீஸை தனது ஸஹீஹுல் புஹாரீ எனும் நூலில் ‘(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்’ எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறித்த ஹதீஸுக்கு ‘(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்’ என விளக்கம் கூறியுள்ளார்கள்.

ஒருவர் அறிந்த நிலையில், தனது தந்தை அல்லாத வேறொருவரை தனது தந்தை என வாதிடுவராயின் அவரது விடயத்தில் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.

இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன:

عَنْ سَعْد رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ. – صحيح البخاري:6766

‘யார் தன் தந்தை அல்லாத ஒருவரை தன் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே தந்தை என்று வாதிடுகிறாரோ, அவர் மீது சுவர்க்கம் ஹராமாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டேன் என ஸஃத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ: 6766)

عن علي رضي الله عنه …من ادعى إلى غير أبيه أو انتمى إلى غير مواليه فعليه لعنة الله والملائكة والناس أجمعين، لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا. – صحيح مسلم: 1370

தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவருக்கு அல்லது தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாத ஒருவரைத் தன் உரிமையாளர் எனக் கூறுபவருக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மனிதர்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, மேலதிக வழிபாடு எதையுமே மறுமைநாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: ஸஹீஹு முஸ்லிம்: 1370)

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا ترغبوا عن آبائكم، فمن رغب عن أبيه فهو كفر. – صحيح البخاري6768

உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு ஒருவரை தம் தந்தை என்று கூறி)விடுகிறாரோ அவர் நன்றி மறுத்தவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புஹாரீ: 6768)

ஒருவரின் தாய், தந்தை அல்லாஹ்வினால் அவருக்கு வழங்கப்பட்ட பெரும் அருட்கொடைகளாவர். அவர்களை நோவினை செய்யாது அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என அல் குர்ஆனும் ஹதீஸும் வலியுறுத்துகின்றன.

எனவே, ஒருவர் தந்தை அல்லாத மற்றொருவரைத் தனது தந்தை என அழைப்பது அல்லாஹ் தஆலா அவருக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளை நிராகரிப்பதாகவும் பெற்றோரை நோவினைப் படுத்தியதாகவும், குடும்ப உறவைத் துண்டித்து நடந்ததாகவும் கருதப்படுகிறது.

அந்தவகையில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைக்கு உண்மையான தந்தையின் பெயரை நீக்கிவிட்டு தத்தெடுத்த தந்தையின் பெயரை இணைத்து அழைப்பதற்கோ ஆவணங்களில் பதிவு செய்வதற்கோ எவ்விதத்திலும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது. மேலும், ஆவணங்களில் எந்த இடங்களில் வேறொருவரின் பெயரைக் குறிப்பிடுவதனால் அது தந்தையின் பெயரோ என சந்தேகிக்கப்படுமோ அப்படியான இடங்களிலும் தந்தை அல்லாத வேறொருவரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. எனினும், ஆவணங்களில் பாதுகாவளரின் பெயர் என குறிப்பிட்டிருக்கும் இடத்தில் தனக்கு பாதுகாவளராக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிடுவதற்கு முடியும்.

தத்தெடுக்கப்படும் பிள்ளைகளுக்கு தத்தெடுத்தவரின் அனந்தரச்சொத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகள் இல்லாவிட்டாலும் தத்தெடுத்தவர் உயிரோடு இருக்கும் போது, அவர் விரும்பும் பங்கை அப்பிள்ளைக்கு சொந்தமாக்கிக் கொடுக்க முடியும். அல்லது குறிப்பிட்ட அளவை அப்பிள்ளைக்கு தனது சொத்தில் தனது மரணத்திற்குப் பின்னர் கொடுக்கும்படி வஸிய்யத் செய்வதற்கும் அனுமதியுண்டு.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா