ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத வேறு பிராணிகளை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாமா? தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/17-368

Question

ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத வேறு பிராணிகளை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாமா?

Fatwa

ACJU/FTW/2019/17-368
2019.08.02 – 1440.11.29

உழ்ஹிய்யா இஸ்லாத்தின் முக்கியமான அமலாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் இன்னும் சிலர் முக்கியமான சுன்னத் என்றும் கூறுகின்றனர்.1

பொதுவாக ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆட்டையே உழ்ஹிய்யவாகக் கொடுக்க வேண்டும். அவையல்லாத எப்பிராணியையும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தால் உழ்ஹிய்யா நிறைவேறாது. இதற்கு
அல்-குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஜ்மாஃ ஆகியவை ஆதாரங்களாக உள்ளன.

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் சூரத்துல் ஹஜ் 27 மற்றும் 28 ஆவது வசனங்களில் உழ்ஹிய்யாப் பிராணியைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது “அன்ஆம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.
“அன்ஆம்” என்பதன் கருத்து ஆடு, மாடு, ஒட்டகம் என்பதாகும் என்று அரபு மொழி வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர்.

இதுபற்றி இமாம் காஸானி றஹிமஹுல்லாஹ் அவர்கள், அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் என்பதில் அரபு மொழி வல்லுனர்களுக்கு மத்தியில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.2

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றியுள்ள பல சட்டங்களையும் உழ்ஹிய்யாப் பிராணிகளின் வயது, எப்பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது கூடாது போன்ற பல விடயங்களையும் மிக விரிவாகக் கூறியுள்ளார்கள். அவற்றில் எங்குமே ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத வேறு எந்தப் பிராணியையும் கொடுக்கலாம் என்று கூறவில்லை.

இது மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் ‘இஜ்மாஃ’ வான ஏகோபித்த கருத்தாகும் என்று இமாம் நவவி3 , இமாம் கஸ்ஸாலி4 , இப்னு ருஷ்து5 , இப்னு அப்தில் பர்6 றஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும், நான்கு மத்ஹப்களுடைய இமாம்களின் கருத்தும் இதுவாகும்.

ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத பிராணிகளையும் உழ்ஹிய்யாக் கொடுக்கலாம் என்ற கருத்து ஒரு சில சஹாபாக்களைத் தொட்டும் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அக்கருத்தை ஏனைய சஹாபாக்களோ அல்லது நம்பத் தகுந்த தாபிஈன்களோ அல்லது மத்ஹப்களின் இமாம்களோ ஆதரிக்கவுமில்லை, அதை ஆதரமாக எடுக்கவுமில்லை. மாறாக அக்கருத்தை அனைவரும் நிராகரித்துள்ளனர்.

ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத ஏனைய பிராணிகளையும் உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம் என்று ஹிஜ்ரி 456ல் மரணித்த இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் என்பவரே மேற்குறித்த சில சஹாபாக்களின் கருத்தை மேற்கோள் காட்டி அவரது நூற்களில் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இக்கருத்து அல்-குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஏனைய மூலாதாரங்களுக்கு மாற்றமாக இருப்பதால் இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்களது காலத்திற்கு முன்னால் உள்ள சஹாபாக்களோ அல்லது தாபிஈன்களோ அல்லது பிற்காலத்தில் வாழ்ந்த அறிஞர்களோ அக்கருத்தை அங்கீகரிக்கவில்லை.

மேலும், இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்களில் கியாஸை மறுக்கும் ழாஹிரீ மத்ஹபைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முன்வைக்கும் பின்வரும் ஆதாரங்கள் அடிப்படையற்றது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

முதலாவது ஆதாரமாக ஜுமுஆடைய நாளில் நேரகாலத்துடன் மஸ்ஜிதிற்கு செல்பவருக்கு கிடைக்கும் நன்மை பற்றி வந்துள்ள ஹதீஸைக் கூறியுள்ளார்.

இந்த ஹதீஸில், ஜுமுஆவடைய தினத்தில் குளித்துவிட்டு மஸ்ஜிதிற்கு ஆரம்ப நேரத்திலேயே சமுகம் தருபவருக்கு ஒட்டகத்தை சதகா செய்யும்; நன்மையும், அதற்கு அடுத்து வருபவருக்கு மாட்டைக் சதகா செய்யும் நன்மையும், அதற்கு அடுத்து வருபவருக்கு ஆட்டை சதகாக் செய்யும் நன்மையும், அதற்கு அடுத்து வருபவருக்கு கோழியை சதகா செய்யும் நன்மையும், அதற்கு அடுத்து வருபருக்கு முட்டையை சதகா செய்யும் நன்மையும் கிடைக்கும் என்று வந்துள்ளது.7

இந்த ஹதீஸில் சதகா செய்தல் எனும் வார்த்தைக்கு அறபியில் قرّب என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கும் قرّب என்ற வார்த்தை அறபியில் பயன்படுத்தப்படும். எனவே, உழ்ஹிய்யாவிலும் ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத கோழி போன்றவற்றையும் கொடுக்கலாம் என்று இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்.

குர்பான் கொடுத்தல் என்பது அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கு கொடுக்கும் சதகாக்கள் அனைத்திற்கும் கூறப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் கூறியது ஜுமுஆவுடைய தினத்தில் நேரகாலத்தோடு மஸ்ஜிதிற்கு செல்வதை ஆர்வமூட்டுவதற்கேயாகும். உழ்ஹிய்யா பற்றி இந்த ஹதீஸில் எதுவும் குறிப்பிடவில்லை. இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்துப்படி கோழியை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம் என்று வைத்துக்கொண்டால், முட்டையையும் உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம் என்றாகிவிடும்.

ஜுமுஆவுடைய தினத்தில் மஸ்ஜிதிற்கு நேர காலத்துடன் சமுகம் தருவதன் சிறப்பு பற்றிக் கூறப்பட்ட ஹதீஸை உழ்ஹிய்யாவிற்கு கியாஸ் (ஒப்புமை) செய்வது, கியாஸுடைய அடிப்படைகளுக்கே மாற்றமானதாகும்.

இரண்டாவது ஆதாரமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட பின்வரும் கூற்றைக் குறிப்பிடுகின்றார்.

அதில், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், தனது அடிமையிடம் இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து இதற்கு இறைச்சி வாங்கி உங்களை சந்திப்பவரிடம் “இது இப்னு அப்பாஸ் அவர்களின் உழ்ஹிய்யா என்று கூறி கொடு” என்று கொடுத்தார்கள்.8

இதன் அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலவீனமானதாகும். இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபுல் மஃஷர் அல் மதனீ என்பவர் மிகவும் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு இது உறுதியான கூற்று என்று எடுத்துக்கொண்டாலும், உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாயம் என்ற கருத்து அக்காலத்தில் சிலரிடம் இருந்துள்ளது. இதை மறுக்கும் முகமாகவே மேற்கூறிய கருத்தை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அனஹுமா அவர்கள் கூறினார்கள் என்று இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.9 அதாவது நான் உழ்ஹிய்யாக் கொடுக்கவில்லை. ஏனெனில் அது கடமையில்லை. இரண்டு திர்ஹம்கள் மட்டுமே ஸதகாவாகக் கொடுத்தேன் என்பதே இவர்களின் கூற்றின் விளக்கமாகும்.

இன்னும் சிலர் இதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றனர்:

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிராணியை குர்பான் கொடுக்கும் வழமை இருந்து வந்ததுள்ளது. உழ்ஹிய்யாவுடைய தினமன்று அவர்களிடம் வெறும் இரண்டு திர்ஹம்களே இருந்தன. அன்று உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு வேறு எந்த ஒன்றும் இருக்கவில்லை. அந்த இரண்டு திர்ஹம்களையும் ஸதகாவாகக் கொடுப்பதே அவர்களின் நோக்கமாகும்.

மூன்றாவது ஆதாரமாக ஸுவைத் பின் கغபலா றஹிமஹுல்லாஹ் அவர்கள் பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கக்கூடிய பின்வரும் சம்பவத்தை இப்னு ஹஸ்ம் கூறியுள்ளார்.

பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “ஒரு கோழியையேனும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தாலும் நான் பொறுட்படுத்த மாட்டேன். உழ்ஹிய்யாவுடைய பெறுமதியை எடுத்து அதனை ஒரு ஏழைக்குக் கொடுப்பது உழ்ஹிய்யாவைக் கொடுப்பதை விட சிறந்ததாகும்.”

இதே சம்பவம் இன்னுமொறு கிரந்தத்தில், இதை பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்களா அல்லது ஸுவைத் பின் கغபலா என்பவர் கூறினார்களா என்ற சந்தேகத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.10

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் என்பவையாகும்.

‘ஸஹாபாக்களின் சொல் அல்லது செயல்’ அடிப்படை மூலாதாரம் ஆகாது. மாறாக அது துணை ஆதாரமாகும். சஹாபாக்களின் கருத்துக்களில் சிலது அவர்களது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். அவற்றில் எவை குர்ஆன் ஹதீஸ் இஜ்மாஃ கியாஸுக்கு மாற்றமாக அல்லது ஏனைய பெரும்பாலான ஸஹாபாக்களின் சொல் அல்லது செயலுக்கு மாற்றமாக இருக்குமோ அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என்பது ஒரு அடிப்படையாகும்.

அவ்வாறே, ஒவ்வொரு ஸஹாபாக்களின் தனிப்பட்ட கருத்துக்களையும் அமல் செய்வதென்றால் இது போன்ற பல தனிப்பிட்ட கருத்துக்கள் உள்ளன. அவற்றையும் அமல் செய்ய வேண்டிவரும்.

உதாரணமாக அபூதர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், அத்தியாவசிய தேவையை விட மிஞ்சிய சொத்துக்களை சேமித்து வைத்துக் கொள்வது ஹராம் என்று மட்டுமல்லாமல் பெரும் பாவம் என்றும் கூறியுள்ளார்கள். இக்கருத்து ஏனைய அனைத்து சஹாபாக்களின் கருத்திற்கும் மாற்றமானதாகும்.

அவ்வாறே, தயம்மும் செய்யும் பொழுது கமுக்கட்டு வரை, இரு கைகளையையும் தயம்மும் செய்ய வேண்டும் என்பது அம்மார் இப்னு யாஸிர் றழியல்லாஹு அன்ஹு அவர்களது கருத்தாகும்.

இவ்வாறு சஹாபாக்களிடம் பல தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. அவை பெரும்பான்மை சஹாபாக்களால் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்களுடைய இவ்வாதரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவாகின்றன.

இவ்வடிப்படையில், ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாதவற்றை உழ்ஹிய்யாக் கொடுக்கலாம் என்று வந்திருக்கக்கூடிய இப்னு அப்பாஸ், பிலால் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் சம்பவங்கள் ஆதாரபூர்வமற்றவையாகும். அல்லது அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

தற்கால பத்வா அமைப்புக்களும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அறிஞர்களும் ஆடு, மாடு, ஒட்டகம், ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்.

எனவே, ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றில் எதை ஒருவருக்கு உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வசதி இருக்குமோ அவர் அவற்றில் ஏதாவது ஒன்றை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம். அதுவல்லாத வேறு எதையும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கமாட்டாது, மாறாக ஸதகாகவின் நன்மையே கிடைக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா                         

 

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்,  
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா      

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

—————————————————————————————————

[1] ذَكَرْنَا أَنْ مَذْهَبَنَا أَنَّهَا سُنَّةٌ مُؤَكَّدَةٌ فِي حَقِّ الْمُوسِرِ وَلَا تَجِبُ عَلَيْهِ وَبِهَذَا قَالَ أَكْثَرُ الْعُلَمَاءِ وَمِمَّنْ قَالَ بِهِ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ وَبِلَالٌ وَأَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ وَسَعِيدُ بْنُ الْمُسَيِّبِ وَعَطَاءٌ وَعَلْقَمَةُ وَالْأَسْوَدُ وَمَالِكٌ وَأَحْمَدُ وَأَبُو يوسف واسحق وَأَبُو ثَوْرٍ وَالْمُزَنِيُّ وَدَاوُد وَابْنُ الْمُنْذِرِ  وَقَالَ رَبِيعَةُ وَاللَّيْثُ بْنُ سَعْدٍ وَأَبُو حَنِيفَةَ وَالْأَوْزَاعِيُّ وَاجِبَةٌ عَلَى الْمُوسِرِ إلَّا الْحَاجَّ بِمِنًى * وَقَالَ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ هِيَ وَاجِبَةٌ عَلَى الْمُقِيمِ بِالْأَمْصَارِ وَالْمَشْهُورُ عَنْ أَبِي حَنِيفَةَ أَنَّهُ إنَّمَا يُوجِبُهَا عَلَى مُقِيمٍ يَمْلِكُ نِصَابًا. “كتاب الحج، باب الأضحية، المجموع”

[2] أَمَّا الْمُسْتَأْنِسُ مِنْ الْبَهَائِمِ فَنَحْوُ الْإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ بِالْإِجْمَاعِ وَبِقَوْلِهِ تَبَارَكَ وَتَعَالَى { وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ } ، وَقَوْلِهِ سُبْحَانَهُ وَتَعَالَى { اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمْ الْأَنْعَامَ لِتَرْكَبُوا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ } وَاسْمُ الْأَنْعَامِ يَقَعُ عَلَى هَذِهِ الْحَيَوَانَاتِ بِلَا خِلَافٍ بَيْنَ أَهْلِ اللُّغَةِ وَلَا تَحِلُّ الْبِغَالُ وَالْحَمِيرُ عِنْدَ عَامَّةِ الْعُلَمَاءِ – رَحِمَهُمْ اللَّهُ تَعَالَى – )بدائع الصنائع)

[3]  نَقَلَ جَمَاعَةٌ إجْمَاعَ الْعُلَمَاءِ عَنْ التَّضْحِيَةِ لَا تَصِحُّ إلَّا بِالْإِبِلِ أَوْ الْبَقَرِ أَوْ الغنم فلا يجزئ شئ مِنْ الْحَيَوَانِ غَيْرُ ذَلِكَ “كتاب الحج، باب الأضحية، المجموع”

[4]  وقال أبو حامد الغزالي (ت 505) في الوسيط (7/132) : الركن الأول الذبيح النظر في جنسه وصفته وقدره، أما الجنس فلا يجزىء إلا النعم وهو الإبل والبقر والغنم.

[5] وقال ابن رشد (ت: 595) في بداية المجتهد (2/193) : وكلهم مجمعون على أنه لا تجوز الضحية بغير بهيمة الأنعام إلا ما حكي عن الحسن بن صالح أنه قال: تجوز التضحية ببقرة الوحش عن سبعة، والظبي عن واحد.

[6]في الاستذكار (5/321) قال: وقد أجمع العلماء أنه لا يجوز في العقيقة إلا ما يجوز في الضحايا من الأزواج الثمانية إلا من شذ ممن لا يعد خلافا.

[7]  عن أبي هريرة رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : ( من راح في الساعة الأولى فكأنّما قرّب بَدَنَة ، ومن راح في الساعة الثانية فكأنّما قرّب بقرة ، ومن راح في الساعة الثالثة فكأنّما قرّب كبشاً أقرن ، ومن راح في الساعة الرابعة فكأنّما قرب دجاجة ، ومن راح في الساعة الخامسة فكأنّما قرّب بيضة ، فإذا صعد الإمام المنبر حضرت الملائكة يستمعون
الذكر )  . رواه البخاري ( 841 ) ومسلم ( 850 ) .

  [8] أخرج عبدالرزاق في المصنف (4/382) ح (8146) من طريق الثوري عن أبي معشر ، ومن طريق أبي معشر عن رجل مولى لابن عباس قال : أرسلني ابن عباس أشتري له لحماً بدرهمين ، وقال : ( قل : هذه ضحية ابن عباس ) .

 [9] قال الإمام الشافعي في الأم (3/586) بعد أن ذكر كلام ابن عباس : وقد كان قلما يمر به يوم إلا نحر فيه أو ذبح بمكة، وإنما أراد بذلك مثل الذي روي عن أبي بكر وعمر  (كانا لا يضحيان كراهية أن يقتدى بهما ليظن من رآهما أنها واجبة)، ولا يعدو هذا القول في الضحايا هذا أن تكون واجبة , فهي على كل أحد صغير أو كبير لا تجزي غير شاة عن كل أحد, فأما ما سوى هذا من القول فلا يجوز . 

[10] أخرج عبدالرزاق في المصنف (4/385) ح (8156) من طريق الثوري عن عمران بن مسلم عن سويد بن غفلة قال : سمعت بلالاً يقول : ( ما أبالي لو ضحَّيت بديك ، ولأنْ أتصدق بثمنها على يتيم أو مغبر أحب إليَّ من أن أضحي بها ) . قال : فلا أدري أسويد قاله من قبل نفسه ، أو هو من قول بلال ؟