மஸ்ஜிதுக்குச் சொந்தமான காணியில் மஸ்ஜிதுடைய பணத்தால் செய்யப்பட்ட விவசாயத்தின் மூலம் பெறப்படும் அறுவடைக்குரிய ஸகாத் தொடர்பான மார்க்க விளக்கம் 

FATWA # ACJU/FTW/2025/09/591

Question

பள்ளிவாசலுக்குரிய காணிகளை, பள்ளிவாசல் பணத்தைக் கொண்டு விவசாயம் செய்து அறுவடை செய்யும் போது, அதில் கிடைக்கும் விளைச்சலுக்கும் ஸகாத் கடமையாகுமா? 

Fatwa

ACJU/FTW/2025/09/591
2025.05.14 / 1446.11.15
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
 
ஸகாத் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இது தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம், சேமித்து வைத்து உணவாக உட்கொள்ளக்கூடிய தானியங்கள், திராட்சை மற்றும் ஈத்தம் பழம் ஆகியவற்றில் மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவை  ஸக்காத் பெறத் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 
 
மேற்கூறப்பட்ட பொருட்களில் ஸகாத் கடமையாகுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றில் அப்பொருட்களுக்கு குறிப்பிட்ட, முஸ்லிமான உரிமையாளர்கள் இருப்பதும் ஒன்றாகும். 
 
அவ்வாறு அப்பொருட்கள் குறிப்பிட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமில்லாமல் மஸ்ஜிதுக்குரியனவாகவோ அல்லது பொது நிதியத்துக்குச் சொந்தமானவையாகவோ அல்லது பொதுத் தேவைகளுக்கு வக்ஃப் செய்யப்பட்டவையாகவோ இருப்பின் அப்பொருட்களிலோ அல்லது அதன் மூலம் பெறப்படும் வருமானங்களிலோ ஸகாத் கடமையாக மாட்டாது. 1
 
‘ஒரு பொருளில் ஸகாத் கடமையாகுவதாயின் அப்பொருளுக்கு குறிப்பான உரிமையாளர் இருப்பது அவசியமாகும். பொதுநல நிறுவனம் அல்லது பொதுவான நோக்கத்திற்காக வகஃப் செய்யப்பட்ட சொத்தில் ஸகாத் கடமையாகாமாட்டாது. எனினும் குறிப்பிட்ட நபருக்காக வக்ஃப் செய்யப்பட்ட சொத்தில் ஸகாத் கடமையாகும்.’  என இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டுகின்றார்கள். 
 
அந்தவகையில், ஒரு மஸ்ஜிதுக்குச் சொந்தமான காணியில் மஸ்ஜிதுடைய பணத்தால் செய்யப்பட்ட விவசாயத்தின் மூலம் பெறப்படும் நெல்லுக்கு அம்மஸ்ஜித் நிர்வாகம் ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
 
எனினும், மஸ்ஜிதுக்குச் சொந்தமான காணி வேறு ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு அவர், அவரது பணத்தினால் செய்த விவசாயத்தின் மூலம் பெற்ற நெல்லுக்கு ஸகாத் கொடுப்பது அவசியமாகும்.
 
மேலும், வக்ஃப் சொத்துக்களைப் பராமரிப்பவர் அநாதைகளின் சொத்துக்களைப் பராமரிப்பவர் போன்றவராவார். எனவே, அவர் அவற்றின் நலனை நோக்காகக் கொண்டு செயல்படுவது அவசியமாகும். 
 
மஸ்ஜிதுடைய பணத்தை இது போன்ற விடயங்களில் பயன்படுத்தும் போது அப்பணம் வீணாகி விடாது மஸ்ஜிதுக்கு மிகவும் பயன் தரும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தை கவனத்திற் கொண்டு செயல்படுவது மஸ்ஜித் நிர்வாகிகளின் பொறுப்பாகும்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
 
 
அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான்    
பதில் செயலாளர், பத்வாக் குழு    
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா   
 
 
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்,
 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  
 
 
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி  
தலைவர், 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 
—————————————————————————-

[1] وَشَرْطُ وُجُوبِهَا أَيْضًا أَنْ يَكُونَ الْمَالِكُ مُعَيَّنًا فَلَا زَكَاةَ فِي الْمَوْقُوفِ عَلَى جِهَةٍ عَامَّةٍ وَتَجِبُ فِي الْمَوْقُوفِ عَلَى مُعَيَّنٍ  (نهاية المحتاج إلى شرح المنهاج ٣/‏١٢٧ — الرملي، شمس الدين (ت ١٠٠٤)