இவ்வருடம் (1448 ஹி-2026) ஆஷூரா மற்றும் தாஸூஆ நோன்புகள் தொடர்பான வழிகாட்டல்

ACJU/FRL/2026/18/486
2026.06.19 (1448.01.03)

முஹர்ரம் மாதம் அல்லாஹ் தஆலாவிடத்தில் மிகவும் கண்ணியமான மாதமாகும். அது அல்லாஹு தஆலா கண்ணியப்படுத்திய நான்கு புனித மாதங்களில் ஒன்றாகும். மேலும், அல்லாஹ்வின் பெயருடன் இணைத்து குறிப்பிடப்பட்ட மாதங்களுள் ஒன்றாகவும் அது திகழ்கிறது.

பொதுவாக முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பது, பர்ளான ரமழான் மாத நோன்பிற்குப் பின்னர் மிகவும் சிறப்புமிக்க நோன்பாகும். இதனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்:

“ரமழான் மாதத்திற்குப் பிறகு மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம் : 1163)

முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளுக்கு ஆஷூரா என்று கூறப்படும். இந்நாளில் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் அவர்களது சமூகத்தாரையும், அநியாயக்கார ஆட்சியாளனாகிய பிர்அவ்னிடமிருந்து அல்லாஹு தஆலா பாதுகாத்தான். இதற்காக நன்றி செலுத்தும் பொருட்டு நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் இந்நாளில் நோன்பு நோற்றதோடு, ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவியுள்ளார்கள்.

எனவே, ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். மேலும், இந்நோன்பு கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த சிறிய பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றது.

அபூ கதாதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“ஆஷூரா தின நோன்பு, அதற்கு முந்திய ஒரு வருடத்தின் (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்: 1162)

பின்வரும் முறைகளில் முஹர்ரம், ஆஷூரா மற்றும் தாஸூஆ நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்:

01. முஹர்ரம் மாதம் முழுவதும் நோன்பு நோற்றல்.

02. முஹர்ரம் 09 மற்றும் 10, அல்லது 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். அதன்படி 2026 ஜூன் 25 (வியாழக்கிழமை) மற்றும் 26 (வெள்ளிக்கிழமை) அல்லது 26 (வெள்ளிக்கிழமை) மற்றும் 27 (சனிக்கிழமை) ஆகிய தினங்களில் நோன்பு நோற்றுக் கொள்ளல்.

03. முஹர்ரம் 09, 10 மற்றும் 11 ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றல். இமாம் ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) உள்ளிட்ட அறிஞர்கள் இது விரும்பத்தக்கதாகும் என குறிப்பிட்டுள்ளனர். அதன்படி 2026 ஜூன் 25, 26 மற்றும் 27 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்ளல்.

⁠04. முஹர்ரம் 10 ஆம் நாளில் மட்டும் நோன்பு நோற்றல். இதற்கும் அனுமதி உள்ளது. அதன்படி 2026 ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) அன்று மட்டும் நோன்பு நோற்றுக் கொள்ளல்.

ஆஷூரா நோன்பு ஹதீஸ்களில் தனிப்பட்ட சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ள சுன்னத்தான நோன்பாக இருப்பதால், அது வெள்ளிக்கிழமையுடன் அமைந்தாலும் அந்நாளில் மட்டும் நோன்பு நோற்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

அல்லாஹ் தஆலா எம் அனைவருக்கும் ஆஷூரா மற்றும் தாஸூஆ நோன்புகளை நிறைவேற்ற அருள் புரிவானாக.

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன