2026 ஏப்ரல் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரப் பிரிவினரின் வழிகாட்டலில் ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புல்’ எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தினை மையப்படுத்தி பல கட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் முதலாவதாக, ‘நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு சிறந்த மனிதனாக வாழ்வது எவ்வாறு?’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று வெள்ளிக்கிழமை காலை முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ஒழுக்கமான தொடர்பாடல் முறை மற்றும் நன்னடத்தைகளின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதனை கடைபிடித் தொழுகுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பல மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
அதனை தொடர்ந்து, முல்லைத்தீவிலுள்ள ஜுமுஆ பள்ளிவாயல்களில் ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் குத்பா உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஹிஜ்ராபுரம்-மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் அவர்களும், நீராவிப்பிட்டி-நூரானிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் பிரச்சாரப் பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் அவர்களும், முல்லைத்தீவு நகர்-மஹ்பூப் ஸுபுஹானி ஜுமுஆ பள்ளிவாயலில் பிரச்சாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பீ.எல். ஸல்மான் அவர்களும் குத்பாக்களை நிகழ்த்தினர்.
அடுத்து, ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பெண்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நீராவிப்பிட்டி-நூரானிய்யா ஜுமுஆ பள்ளிவாயல் மற்றும் முல்லைத்தீவு நகர்-மஹ்பூப் ஸுபுஹானி ஜுமுஆ பள்ளிவாயல் ஆகியவற்றில் அஸர் தொழுகையினை தொடர்ந்து நடைபெற்றன.
இதில், குறித்த மஹல்லாக்களை சேர்ந்த பெருமளவிலான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.
அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்தவர்கள், ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் சமூக முக்கியஸ்தர்களுடனான ஒரு விசேட சந்திப்பு ஹிஜ்ராபுரம்-மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில், ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் சமூகத் தலைவர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் இது தொடர்பிலான சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு வலுவான சமூகத்தை கட்டமைப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில், முல்லைத்தீவு மாவட்ட ஜம்இய்யா சார்பில் அதன் செயலாளர் அஷ்-ஷைக் ஜே. ஆதில் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதில், ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பில், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், பிரச்சாரப் பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் மற்றும் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பீ.எல். ஸல்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.




– ACJU Media –



