2026 மே 08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரப் பிரிவினரின் வழிகாட்டலில் ‘வலுவான சமூகத்தை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளிலான சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள், புத்தளம் மாவட்டத்தினை மையப்படுத்தி நடத்தப்பட்டன.
அந்த வகையில், புத்தளம் மாவட்டத்திலுள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளான புத்தளம் நகர் கிளை, கற்பிட்டி கிளை, மதுரங்குளி கிளை ஆகியவற்றின் அங்கத்துவ ஆலிம்களுடனான சுமுகமான சந்திப்புகள் அந்தந்த கிளைகளில் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து, ‘நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு சிறந்த மனிதனாக வாழ்வது எவ்வாறு?’ எனும் தலைப்பில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்தளம் நகர் பகுதியில் 04 பாடசாலைகளிலும், கற்பிட்டியிலுள்ள 02 பாடசாலைகளிலும், மதுரங்குளி பகுதியிலுள்ள 07 பாடசாலைகளிலும் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில், ஒழுக்கமான தொடர்பாடல் முறை மற்றும் நன்னடத்தைகளின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதனை கடைபிடித் தொழுகுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, புத்தளத்திலுள்ள ஜுமுஆ பள்ளிவாயல்களில் ‘வலுவான இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் குத்பா உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அந்தவகையில் புத்தளம் நகர் கிளைக்குட்பட்ட 04 ஜுமுஆ பள்ளிவாயல்களிலும், கற்பிட்டி கிளைக்குட்பட்ட 03 ஜுமுஆ பள்ளிவாயல்களிலும், மதுரங்குளி கிளை கிளைக்குட்பட்ட 04 ஜுமுஆ பள்ளிவாயல்களிலும் குத்பா உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அடுத்து, ‘வலுவான இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பெண்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வுகள் புத்தளம் நகர், கற்பிட்டி, மதுரங்குளி ஆகிய பகுதிகளில் அஸர் தொழுகையினை தொடர்ந்து நடைபெற்றன.
இதில், குறித்த கிளைகளுக்குட்பட்ட பெருமளவிலான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.
அதனை தொடர்ந்து, புத்தளம் மாவட்டத்திலுள்ள துறை சார்ந்தவர்கள், ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் சமூக முக்கியஸ்தர்களுடனான விசேட சந்திப்புகள் புத்தளம் நகர், கற்பிட்டி, மதுரங்குளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.
இச்சந்திப்புகளில், ‘வலுவான சமூகத்தை கட்டியெழுப்புவதில் சமூகத் தலைவர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் இது தொடர்பிலான சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு வலுவான சமூகத்தை கட்டமைப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
புத்தளம் நகர் கிளைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர் எச். உமர்தீன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம், அஷ்-ஷைக் முஃப்தி நிஹார், அஷ்-ஷைக் யஹ்யா, அஷ்-ஷைக் பவாஸ், அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
கற்பிட்டி கிளைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத், அஷ்-ஷைக் முஹம்மத், அஷ்-ஷைக் ரமழான் மர்ஸூக், அஷ்-ஷைக் முஃப்தி பர்ஹான், சகோதரர் ரம்ஸி க்ராத்தி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
மதுரங்குளி கிளைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், அஷ்-ஷைக் ஏ. யாஸீம் ஆகியோருடன் அஷ்-ஷைக் ஸல்மான் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தார்.











– ACJU Media –



