ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில், நடைபெற்ற ‘அரபுக் கல்லூரிகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பிலான விசேட நிகழ்வு

2026 மே 10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில், ‘அரபுக் கல்லூரிகளை மேம்படுத்தல்’ எனும் தொனிப்பொருளிலான விசேட நிகழ்வு வெள்ளவத்தை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நாடளாவிய ரீதியிலுள்ள பதிவு செய்யப்பட்ட 105 அரபிக் கல்லூரிகளிலிருந்து தலைவர், அதிபர், நிர்வாகிகள் என சுமார் 320க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக அல்-குர்ஆன் பாராயணம் செய்யப்பட்டது.

அதனையடுத்து நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் முகமாக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

வரவேற்புரையினை தொடர்ந்து ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்கள் ஆரம்ப உரையினை வழங்கினார். அவர் தனது உரையில் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவு குறித்த அறிமுகத்தினை வழங்கியதுடன் அரபுக் கல்லூரிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

அடுத்ததாக, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். முர்ஷித் முலப்பர் உரையாற்றினார். அவர் தனது உரையில் அரபுக் கல்லூரிகள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டுக் காட்டியதுடன் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான வழிவகைகள் குறித்தும் விளக்கக் காட்சிகளுடன் தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்கள் அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டம் குறித்தும், ஜம்இய்யாவின் கல்விப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் அவர்கள் அரபுக் கல்லூரிகளின் நிர்வாக முகாமைத்துவம் குறித்தும் விளக்கக் காட்சிகளுடன் தெளிவுகளை வழங்கினர்.

தொடர்ந்து, ‘அரபுக் கல்லூரிகளின் நிதி விவகாரம் மற்றும் நிதி முகாமைத்துவம் எவ்வாறு அமைய வேண்டும்? என்பது குறித்து ஜம்இய்யாவின் கணக்காளர் சகோதரர் இர்பஃத் அவர்கள் பல்வேறு நடைமுறை அம்சங்களை தொட்டுக்காட்டி விளக்கங்களை வழங்கினார்.

அடுத்ததாக ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்கள் அரபுக் கல்லூரிகளின் நிர்வாகிகள், பதவி தாங்குநர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த உருக்கமான உபதேச உரையொன்றினை வழங்கினார்.

அவரது உரையை தொடர்ந்து, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் இணையவழி மூலமாக கலந்துகொண்டு நிகழ்விற்கு வருகை தந்திருந்தவர்களுக்கு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ‘தஜ்தீத்’ எனப்படும் ஒரு சிறந்த முன்மாதிரி முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய ஜம்இய்யாவின் புதிய பயணம்’ எனும் தலைப்பில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டதுடன், அரபுக் கல்லூரிகள் விவகாரத்திலும் நல்ல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படவேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்ததாக, ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் இந்நிகழ்வுக்காக வழங்கிய உரையின் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக, அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். குறிப்பாக இந்நிகழ்விற்கு பல பகுதிகளிருந்து வருகை தந்தவர்களுக்கும், நிகழ்விற்கான இடத்தினையும் ஏனைய ஒத்துழைப்புகளையும் வழங்கிய வெள்ளவத்தை பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்திற்கும் ஜம்இய்யா சார்பில் அவர் தனது நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன