கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் பிரமுகர்கள் 2026 ஜூலை 08 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அதன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
மதஸ்தலங்கள் மற்றும் சமய உயர்பீடங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் கூட்டு எதிர்க்கட்சியினரின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், பதில் பொதுச் செயலாளர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டு எதிர்க்கட்சி சார்பில் அதன் கௌரவ தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, லசந்த அழகியவண்ண, மஹிந்த அமரவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, முன்னாள் கௌரவ மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வருகை தந்திருந்த பிரமுகர்களை வரவேற்று உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், முதலில் சபையிலிருந்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் நாடளாவிய ரீதியிலான ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
அதனை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் அவர்கள், தமது கட்சி பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் நாட்டின் முன்னேற்றத்தில் தாம் புரிந்துணர்வுடன் ஒன்றித்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அடுத்து, கட்சியின் உறுப்பினர்கள் தமது கட்சியின் நோக்கம் மற்றும் கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் பலம்மிக்க எதிர்க்கட்சியாக தாம் ஒன்றிணைந்திருப்பதற்கான காரண காரியங்களையும் முன்வைத்தனர்.
இதன்போது, ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், கடந்த காலங்களில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து சுட்டிக் காட்டியதுடன் அவற்றிற்கான முறையான தீர்வுகள் எட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தற்போதை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புகளை வழங்குவதுடன் நாட்டின் சட்ட யாப்பிற்குட்பட்டு தமக்கான பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்தோடு, வெறுப்புப் பேச்சுக்களை விதைத்து அரசியல் இலாபம் தேடும் தீய செயற்பாட்டை கட்சிகள் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது எனவும் பொதுச் செயலாளர் தனது உரையில் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள், சமயம் சார் அமைப்பு என்ற வகையில் நாட்டின் சகல தரப்புகளிடையிலும் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்ப்பதாகவும், அரசியல் அதிகாரங்களுக்காக மக்கள் மத்தியில் இனவாத சிந்தனைகளை ஏற்படுத்தி முறுகல் நிலைமைளை தோற்றுவிக்கும் செயற்பாட்டிலிருந்து அரசியல்வாதிகள் படிப்பினை பெற்று செயற்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக, ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










– ACJU Media –


