ஜம்இய்யாவின் கம்பஹா மாவட்ட மற்றும் பிராந்தியக் கிளைகளுக்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள 08 பிராந்தியக் கிளைகளுக்குமான நிர்வாகக் குழுத் தெரிவுகள் 2026 ஜூலை 05 அன்று ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன.

அந்தவகையில் வத்தளை, திஹாரிய, கஹட்டோவிட்ட, மல்வானை, பூகொடை, மினுவாங்கொட மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிராந்தியக் கிளைகளுக்கான நிர்வாகத் தெரிவுகள் அந்தந்த பகுதிகளிலுள்ள மஸ்ஜிதுகளில் நடத்தப்பட்டு பதவிதாங்குனர்கள் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மேற்படி புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் முன்னைய மாவட்டக் கிளை உறுப்பினர்கள் பேலியகொடை ஜுமுஆ மஸ்ஜிதில் ஒன்றுதிரட்டப்பட்டு கம்பஹா மாவட்டக் கிளைக்கான தெரிவு நடத்தப்பட்டதுடன், மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. ஜம்இய்யாவின் யாப்பு விதிகளுக்கமைய, இரகசிய வாக்கெடுப்பு மூலமாகவே, குறித்த தெரிவுகள் அனைத்தும் நடைபெற்றன.

இத்தெரிவுகள், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் மற்றும் அஷ்-ஷைக் மபாஹிம் ஆகியோரது மேற்பார்வையில் நடைபெற்றதுடன், ஜம்இய்யாவின் பொது முகாமையாளர் எஸ். ஜவாஹிர் சாலி அவர்களின் நெறிப்படுத்தலிலும் கிளைகள் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் காதர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், ஜம்இய்யாவின் ஆளணியினரின் பங்களிப்புடனும் நேர்த்தியாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன