கூட்டு எதிர்க்கட்சியினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம்

கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் பிரமுகர்கள் 2026 ஜூலை 08 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அதன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

மதஸ்தலங்கள் மற்றும் சமய உயர்பீடங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் கூட்டு எதிர்க்கட்சியினரின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இச்சந்திப்பு நடைபெற்றது.

குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப பொதுச் செயலாளர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் அதன் கௌரவ தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, லசந்த அழகியவண்ண, மஹிந்த அமரவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, முன்னாள் கௌரவ மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வருகை தந்திருந்த பிரமுகர்களை வரவேற்று உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், முதலில் சபையிலிருந்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் நாடளாவிய ரீதியிலான ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் அவர்கள், தமது கட்சி பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் புரிந்துணர்வுடன் ஒன்றித்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அடுத்து, கட்சியின் உறுப்பினர்கள் தமது கட்சியின் நோக்கம் மற்றும் கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் பலம் மிக்க எதிர்க்கட்சியாக தாம் ஒன்றிணைந்திருப்பதற்கான காரண காரியங்களையும் முன்வைத்தனர்.

இதனையடுத்து, ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், கடந்த காலங்களில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து சுட்டிக் காட்டியதுடன் அவற்றிற்கான முறையான தீர்வுகள் எட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புகளை வழங்குவதுடன் நாட்டின் சட்ட யாப்பிற்குட்பட்டு தமது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்தோடு, வெறுப்புப் பேச்சுக்களை விதைத்து அரசியல் இலாபம் தேடும் தீய கலாச்சாரத்தை கட்சிகள் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது எனவும் பொதுச் செயலாளர் தனது உரையில் தெரிவித்தார்.

அதனையடுத்து கருத்து தெரிவித்த ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள், இலங்கை சுதந்திரம் பெற்று தற்போது 78 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஒரு காலத்தில் அரிசி நாட்டின் பேசுபொருளாகவும் அரசியல்வாதிகளின் அரசியல் மூலதனமாகவும் இருந்து வந்த வரலாற்றை நினைவுகூர்ந்தார்.

அரிசி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர், அரசியல்வாதிகள் சமூகங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி, இன முறுகல்களைத் தூண்டும் செயற்பாடுகளை ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தங்களது மூலதனமாகப் பயன்படுத்தத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமயம் சார்ந்த அமைப்பு என்ற வகையில், நாட்டின் அனைத்துத் தரப்பினரிடையிலும் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்ப்பதாகவும், அரசியல் அதிகாரங்களுக்காக மக்கள் மத்தியில் இனவாதச் சிந்தனைகளைத் தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்கும் செயற்பாடுகளில் இருந்து அரசியல்வாதிகள் பாடம் கற்று பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, கூட்டு எதிர்க்கட்சி தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களிடம் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன