அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவினருக்கும் இலங்கை மருத்துவ சங்க அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு

இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள் 2026 ஜூலை 08அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழுவினருடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள், கடந்த 06 மாதங்களில் வீதி விபத்துகளினால் சுமார் 1,460 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாவும், எதிர்காலத்தில் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களுக்கு சமய மற்றும் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும் ஜம்இய்யா தனது ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதியளித்தார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் சாலைப் போக்குவரத்து விபத்து தடுப்பு தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ், வைத்தியர் ருவன் துஷார மெட்டிவலகே உள்ளிட்ட குழுவின் பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜம்இய்யா சார்பில் அதன் பதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப பொதுச் செயலாளர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன