ACJU/NGS/2022/081
2022.04.02 (1443.08.29)
‘யா அல்லாஹ், இந்தப் பிறையை பாதுகாப்பைக் கொண்டும், நம்பிக்கையைக் கொண்டும், ஈடேற்றத்தைக் கொண்டும், சாந்தியைக் கொண்டும் தோன்ற வைப்பாயாக. (சந்திரனே!) உன்னுடைய இரட்சகனும், என்னுடைய இரட்சகனும் அல்லாஹ் ஆவான். இந்தப் பிறை வழிகாட்டலையும், நல்லதையும் கொண்டு வர வேண்டும்’.
‘யா அல்லாஹ்! என்னை ரமழானுக்கு வழங்கி, ரமழானை எனக்கு அடையச் செய்வாயாக, என்னிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் அதை விடுவிப்பாயாக.’
ரமழான் மாதம் என்பது அல்லாஹ் தஆலா முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகச் சிறந்தவொரு அருட்கொடையாகும். அம்மாதத்திலேயே அல்லாஹ் தஆலா சங்கைமிகு புனித அல்-குர்ஆனை ஒரு வழிகாட்டியாக, நன்மை தீமையை பிரித்துக் காட்டும் ஒரு பிரிவுகோலாக எமக்கு அருளியுள்ளான். இம்மாதம் நன்மைகளையும் அருட்கொடைகளையும் பல பாக்கியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆசிர்வதிக்கப்பட்ட மாதமாக திகழ்கின்றது.
நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூ{ஹரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: சங்கையான மாதமான ரமழான் உங்களிடம் வந்துள்ளது. அதில் எல்லாம் வல்ல அல்லா{ஹதஆலா நோன்பு நோற்குமாறு உங்களை கட்டளையிட்டுள்ளான். அம்மாதத்தில் சுவர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு அனைத்து ஷைத்தான்களும் சங்கிலியிடப்பட்டுள்ளன. அதில் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை வைத்திருக்கின்றான். எவர் அதன் நன்மையை இழக்கின்றாரோ உண்மையில் அவர் சகல பாக்கியங்களும் இழந்தவராவார். (இப்னு மாஜா)
இந்தப் புனிதமான மாதத்தில் சிரமத்திலும் கஷ்டங்களிலும் துயரப்படும் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ் மிகவும் நீதியானவனும் மிக்க கருணையாளனும் ஆவான். இந்தப் புனித மாதத்தின் அருள்களை எல்லோருடனும் கருணை மற்றும் தாராள மனப்பான்மையுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உண்மையிலேயே, ஒருவன் தனக்காக நேசிப்பதை தனது சகோதரனுக்காக நேசிக்கும் வரை அவனுடைய ஈமான் முழுமையடையமாட்டாது.
இந்த ஆண்டு பிரயோசனமான முறையில் ரமழானைப் பயன்படுத்த முயற்சிப்போமாக! எல்லாம் வல்ல அல்லா{ஹ தஆலா அவனுடைய அருளையும் பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் எமக்களித்து அவனுடைய பொருத்தத்தை பெற்ற கூட்டத்தில் நம்மனைவரையும் சேர்த்தருள் புரிவானாக!
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



