இலங்கைக்கான சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம்

புதிதாகப் பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு வேய் ஹுவாஷியாங் அவர்கள், 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு விஜயம் செய்து, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.

ஐம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், சீனத் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளை வரவேற்று உரையாற்றியதுடன், ஜம்இய்யாவின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்த அறிமுகத்தையும் வழங்கினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் சமய, கல்வி, வணிக மற்றும் அரசியல் உறவுகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், சீனாவில் இஸ்லாத்தின் பரவல் மற்றும் சீன முஸ்லிம்களின் சமய, கலாசாரப் பாரம்பரியங்கள் குறித்தும் அவர்களின் சமய, கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சில வெளியீடுகள் சீனத் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அத்தோடு, சீனாவின் வரலாற்றை எடுத்துரைக்கும் ஓவியங்கள் அடங்கிய நூலொன்றைச் சீனத் தூதுவர், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களிடம் கையளித்தார்.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் பதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொதுச் செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன