மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை குறித்த ஜம்இய்யாவின் அறிக்கை

2026.03.06
1446.09.16

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்கிறது.

அப்பிராந்தியத்தில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற அனைத்து அசம்பாவிதங்களையும் இராணுவ நடவடிக்கைகளையும் ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக ஈரான் நாட்டின் தலைவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீதும் 165 இற்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட கொலைத் தாக்குதல் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்பினராலும் வளைகுடா நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் அப்பாவி மக்களது உயிர்கள் பலியாவது இஸ்லாமிய போதனைகளுக்கும்,சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கும் மற்றும் ஒழுக்கக் கொள்கைகளுக்கும் முரணானது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

“ஓர் உயிரைக் கொன்றவன் – ஓர் உயிர்க்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பம் விளைவித்ததற்காக அல்லாமல் – மனிதகுலம் முழுவதையும் கொன்றவனைப் போன்றவன் ஆவான்.” (குர்ஆன் 5:32) என அல்-குர்ஆன் கூறுகிறது.

இந்த மோதல்களது பாதிப்புகள் மத்திய கிழக்கை மாத்திரல்லாமல், உலகில் உள்ள வறுமைப்பட்ட ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு குடிமகனையும் பொருளாதார ரீதியாகவும் உளரீதியாகவும் பாதித்திருப்பது மிகப் பெருங் கவலையை தருகிறது.

இந்த நாடுகளது ஒவ்வொரு துறையிலும் இந்த யுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது போலவே வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு ஆகியவற்றிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜம்இய்யா பின்வரும் சிபாரிசுகளை முன் வைக்கிறது:

1. உடனடியானதும் நிபந்தனையற்றதுமான போர்நிறுத்தத்தை மேற்கொள்ளல்.

2. நாடுகளுக்கிடையிலான உறவுகள் பற்றிய சர்வதேச சட்ட விதிகளை அனைத்து தரப்பினரும் முழுமையாகக் கடைப்பிடித்தல்.

3. பிறநாடுகளது வளங்களை சுரண்டுவதில் இருந்தும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில் இருந்தும் தவிர்ந்திருத்தல்.

4. ஐக்கிய நாடுகள் தாபனம் போன்ற அமைப்புகளது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முழுமையாக செவிமடுத்து மனித உரிமைகளை மீளக் கட்டியெழுப்புதல்.

5. பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதோடு சேதப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புகளை மீளவும் கட்டி எழுப்புதல்.

மேலும்,

இலங்கை அரசாங்கமானது தூரநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்றும், அடக்குமுறைக்கு உள்ளாகிய மக்களுடன் நீதி மற்றும் ஒற்றுமை என்ற கொள்கையுடன் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகிறோம்.

அதே வேளை, தேசிய நலன்களை பாதுகாப்பதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கை குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ் ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்து, உலகத் தலைவர்களை நீதியின் பாதையில் வழிநடாத்தி, உலகமெங்கும் அமைதி, நிலைத்த தன்மை மற்றும் பாதுகாப்பு நிலவ அருள் புரிவானாக !

– அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன