ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி – 2026

ACJU/NGS/2026/70
2026.05.28 (1447.12.10)

உலகில் உள்ள இரு பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன்று ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்நன்னாளில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கை முஸ்லிம்களாகிய நாமும் இந்தப் புனித நாளை கொண்டாடும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்ற உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் இனிய ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் சுமார் 16 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித மக்கா, மினா மற்றும் அரபா மைதானங்களில் ஒன்றுகூடியுள்ளனர். இவர்களில் இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் சுமார் 3,500 ஹாஜிமார்களும் அடங்குகின்றனர்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நிறைவேற்றிய ஹஜ்ஜின் ‘ஹஜ்ஜதுல் வதாவில்’ வழங்கிய அரபா உரை, உலக சமாதானம், மனித சமத்துவம், நீதி, மனித உரிமைகள் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் காலத்தால் அழியாத மாபெரும் மனிதநேயப் பிரகடனமாகும்.

அந்த உரையில் மனித உயிரின் கௌரவம், பெண்களின் உரிமைகள், அநியாயங்கள் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகி வாழ வேண்டிய அவசியம், பொருளாதார நீதி மற்றும் சமூக ஒற்றுமை போன்ற உயரிய வழிகாட்டுதல்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சந்தித்த சோதனைகளின் போது கடைப்பிடித்த பொறுமை, அவர்களின் தியாகமிகு வாழ்வு, உறுதியான ஈமான் மற்றும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிந்த பண்பு ஆகியவற்றை அல்-குர்ஆன் 25 அத்தியாயங்களில் 63 இடங்களில் எமக்கு நினைவூட்டுகிறது.

அவர்களின் ஈமானிய உறுதி மற்றும் தியாக வாழ்க்கைக்காக அல்லாஹ் வழங்கிய உயர்ந்த அந்தஸ்தும் சிறப்புகளும் மனிதகுலத்திற்கு நிலையான முன்மாதிரியாக திகழ்கின்றன.

இத்தியாகத் திருநாள் எமக்குக் கற்றுத்தரும் உயரிய பாடங்களான அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிதல், அல்லாஹ்வின் மீதான நேசம், அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை, தவக்குல், முன்மாதிரிமிக்க சிறந்த பிள்ளை வளர்ப்பு, பெற்றோருக்குக் கட்டுப்படல் போன்ற பண்புகளை எமது வாழ்விலும் நடைமுறைப்படுத்துவோமாக! மேலும் எமது குடும்பங்களிலும் சமூகத்திலும் இவ்வாறான உயர்ந்த நற்பண்புகளை வளர்த்தெடுத்து, இம்மையும் மறுமையும் வெற்றிபெறும் வாழ்வை அமைத்துக்கொள்ள அல்லாஹ் அருள் புரிவானாக!

இன்று புனித மண்ணில் கூடியிருக்கும் இலட்சக்கணக்கான ஹாஜிமார்களின் பிரார்த்தனைகளின் பொருட்டு உலகின் பல பகுதிகளில் நடைபெற்றுவரும் யுத்தங்கள், மனித உரிமை மீறல்கள், பொருளாதார சீரழிவுகள் மற்றும் அனைத்து அநீதிகளும் நீங்கிட அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

எமது இலங்கை நாட்டில் அமைதி நிலவிக்கொண்டிருப்பதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வாழ்வாதார சிரமங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்கள் நீங்கி, எமது நாடு வளமும் வலிமையும் மிக்க தேசமாக வளர அல்லாஹ் அருள் புரிவானாக எனவும் பிரார்த்திக்கின்றோம்.

மேலும் மனிதநேயம், நல்லிணக்கம், சக வாழ்வு மற்றும் ஒற்றுமை ஆகிய உயரிய பண்புகள் தொடர்ந்தும் இந்நாட்டின் அனைத்து சமூகங்களிடையிலும் நிலைத்திருக்க அல்லாஹ் அருள்புரிவானாக!

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன