2026 மே 25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
கொழும்பு, கம்பஹா பகுதிகளில், ‘மஆரிபுல் வஹீ ‘ உள்ள அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டத்தினை கற்பிப்பதில் 15 வருட அனுபவமுள்ள சிரேஷ்ட முஅல்லிம்கள் இதில் கலந்துகொண்டனர்.
குறித்த சந்திப்பில், ஜம்இய்யாவின் ‘தஜ்தீத்’ எனும் புதிய பயணத்திற்கமைய அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், மேம்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதுடன் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்தோடு, அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பாடப் புத்தக விநியோகத்தை துரித்தப்படுத்தல், போட்டிப் பரீட்சைகளை அறிமுகம் செய்தல், சான்றிதழ்கள் வழங்குதல், வருடாந்த ஒன்றுகூடல்களை நடத்தல், முறையான மேற்பார்வை செய்தல் ஆகியன தொடர்பிலும் பேசப்பட்டது. மேலும், தரம் 06 தொடக்கம் 08 வரைக்குமான முக்கிய பாடத்திட்டம் மற்றும் அதற்கான ஆங்கில, சிங்கள புத்தகங்களின் தேவைகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் மற்றும் அஷ்-ஷைக் அஃலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



– ACJU Media –



