அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வாராந்த செயற்குழுக் கூட்டம், தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கண்டியில் இனாயா கார்டனில் நடைபெற்ற இரு நாள் விசேட கூட்டத்தில், ஜம்இய்யாவின் ‘தஜ்தீத்’ பயணத்திற்கமைய அடுத்த 02 ஆண்டுகளுக்காக வரையறுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் குறித்தும், அவற்றை நிர்வாக ஆளணியினருடன் இணைந்து எவ்வாறு திறம்பட முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இச்செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக ஒழுங்குகள், பொறுப்புப் பகிர்வுகள் மற்றும் புதிய நடைமுறைகள் தொடர்பில் ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் வை.எல்.எம். நவவீ அவர்கள் ஆளணியினருக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவிற்கும் ஆளணியினருக்கும் இடையிலான தொடர்புகளையும் உள் நிர்வாகச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து, வரையறுக்கப்பட்ட செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர், உதவிப் பொதுச் செயலாளர் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் மற்றும் உப பிரிவுகளின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.



– ACJU Media –


