அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அடுத்த இரு ஆண்டுகளுக்குமான திட்டமிடலை மேற்கொள்வதற்கான விசேட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில், 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கண்டி-ஹெந்தஸ்ஸ, இனாயா கார்டனில் (G’CEC) நடைபெற்றது.
கடந்த ஒரு வருடத்தில் ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்தல் மற்றும் 2027-2028 ஆம் ஆண்டுகளுக்கான உப பிரிவுகளின் எதிர்கால செயற்றிட்டங்களை தயாரித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, உப பிரிவுகளின் தவிசாளர், செயலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் கடந்த ஒரு வருடத்தில் தத்தமது பிரிவுகளினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவற்றின் அடைவுகள் குறித்தும் தெளிவுகள் வழங்கப்பட்டன.
அத்தோடு, 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளுக்கான செயற்றிட்டங்கள் மற்றும் அவற்றிற்கான திட்டமிடல்கள் தொடர்பிலும் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் நிறைவேற்றுக் குழுவினரின் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் உப தலைவர்கள், உதவிப் பொதுச் செயலாளர்கள், உப பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் மற்றும் உப பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த இக்கூட்டமானது, ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அவர்களின் திட்டமிடலிலும் பொதுமுகாமையாளர் அவர்களது ஒருங்கிணைப்புடனும் மிக நேர்த்தியாக நடைபெற்றது.
இக்கூட்டம் சிறப்பாக நடைபெற மண்டபம் மற்றும் இதர வசதிகளை மிக சிறப்பாக ஏற்பாடுசெய்து பங்களித்த கண்டி-ஹெந்தஸ்ஸ, இனாயா கார்டன் (G’CEC) முகாமைத்துவப் பிரிவினருக்கு ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு மனமார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறது.













– ACJU Media –


