2018.02.27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் MUSLIM AID நிறுவனத்துடன் இணைந்து மல்வானை அல்ஃமுபாரக் ஆரம்பப் பாடசாலையில் புதிய நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
காலை எட்டு மணியளவில் அல்குர்ஆன் வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் இரண்டு நிகழ்வாக தேசிய கீதமும், பாடசாலை கீதமும் அப்பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.
அதிபரால் நிகழ்த்தப்பட்ட வரவேற்புரையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக் அவர்களது சிங்கள மொழியிலான உரை இடம்பெற்றது. அவர்கள் தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துக் கூறியதுடன் அதன் செயற்பாடுகளையும் சுருக்கமாக முன்வைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அல்ஹாஜ் எம்.எம் இஸ்மாஈல் அவர்கள் எமது சமூகத்தின் கல்வி நிலை தொடர்பாகவும், அப்பாடசாலையின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். அவரது உரையைத் தொடர்ந்து மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் அவர்களின் உரை இடம் பெற்றது. அவரது உரையில் மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தன்னாலான உதவிகளை செய்வதாகவும், அதற்காக பாடுபடுகின்ற முஸ்லிம்களின் ஏனைய அமைப்புக்கள் தொடர்ந்தும் கல்வி விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறான பணிகளில் ஈடுபடும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தான் பாராட்டுவதாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து நூலகத் திறப்பு வைபவம் இடம் பெற்றது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் முன்னிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக், மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் ஆகியோர் இணைந்து நூலகத்தை திறந்து மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளித்தனர்.
தொடர்ந்து MUSLIM AID நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர்கான் அவர்களின் உரை சுருக்கமாக இடம் பெற்றது. தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா MUSLIM AID நிறுவனத்துடன் சேர்ந்து பல சேவைகளை முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்களின் அறிவுரைகளுடன் கூடிய உரை இடம் பெற்றது. தனது உரையில் எமது கவனங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி உதவிகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கல்வியுடன் கூடிய ஒழுக்கத்தையும், மார்க்க அறிவையும் கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இறுதி நிகழ்வாக இடம் பெற்ற நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதிகளுக்கு ஞாபக சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா