அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் – 2025

2025 ஆகஸ்ட் 17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 164 மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆலிம்கள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலின் பிரதான இமாம் அல்-ஹாபிழ் அல்-காரி ஷஈத் ஜம்ஸித் அவர்களினால் அல்-குர்ஆன் கிராஅத் ஓதப்பட்டது.

கிராஅத்தினை தொடர்ந்து ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷெய்க் சீ.எம். அப்துல் முக்ஸித் அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்த பதவிதாங்குனர்களை வரவேற்கும் முகமாக வரவேற்புரையினை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் 2022 தொடக்கம் 2025 வரைக்குமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயற்பாட்டறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மரணித்த ஜம்இய்யாவின் மூத்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை நினைவு கூர்ந்ததுடன் இம்மூன்று வருடங்களில் ஜம்இய்யாவின் செயற்பாடுகளுக்காக பங்காற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

பொதுச் செயலாளரது உரையினை அடுத்து அல்-ஹாபிழ் அல்-காரி ஷஈத் ஜம்ஸித் அவர்கள் அழகிய கஸீதா ஒன்றினை பாடினார்.

அதனையடுத்து ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்கள் 2022 தொடக்கம் 2025 வரையிலான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 03 வருடங்களுக்கான கணக்கறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார்.

அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஜம்இய்யா கடந்த காலங்களில் சந்தித்த சவால்கள் மற்றும் தற்போது கண்டிருக்கும் வளர்ச்சி குறித்து வரலாற்று நிகழ்வுகளை தொட்டுக்காட்டி விளக்கியதுடன் ஆலிம்கள் தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்து, பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை குறித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரகடனமானது நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட கிளைப் பதவிதாங்குனர்கள் முன்னிலையில் குறித்த பிரகடனமானது வாசிக்கப்பட்டு சபையில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பிரகடன வெளியீட்டை அடுத்து, அகில ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய யாப்பு தொடர்பான அறிமுக உரையினை ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் வழங்கினார். மேலும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் மற்றும் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஆகியோர் புதிய திருத்தங்களை சபையில் வாசித்துக் காட்டியதுடன் மாவட்ட மற்றும் பிரதேச கிளைகளின் பதவி தாங்குனர்களின் முன்னிலையில் புதிய யாப்பானது 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

அதனையடுத்து தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் பற்றி சபையில் தெளிவுபடுத்தியதுடன் இப்பணிக்காக சகல விதத்திலும் பங்களிப்பாற்றிய நலன் விரும்பிகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றி செலுத்தி பிரார்த்தித்தார்.

அதனை தொடர்ந்து அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பை மாவட்ட ரீதியிலுள்ள பொது நூலகங்கள், பாடசாலைகள், அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், பிரதான நகர பள்ளிவாயல்கள், சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் மற்றும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றோர், செல்வாக்கு மிக்க பிற மத சமூகத் தலைவர்களுக்கு கையளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டங்களின் பதவிதாங்குனர்களுக்கும் ஒரு பிரதி முதற்கட்டமாக கையளிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்கள் நன்றியுரையினை நிகழ்த்தினார்.

ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஏ.எம். ஆஸாத், அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இப்பொதுக்கூட்டத்தை திறன்பட நடாத்தி முடிப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து உதவிய ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளுக்கும் நிகழ்வுக்கான இடத்தினை வழங்கிய தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

– ACJU MEDIA –

 

Related Posts

2 thoughts on “அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் – 2025”

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன