அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள 14 பிராந்தியக் கிளைகளுக்குமான அடுத்த மூன்றாண்டுகளுக்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள் 2026 நவம்பர் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிராந்தியக் கிளைகளான மத்தியமுகாம், நற்பிட்டிமுனை, மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, இறக்காமம், சம்மாந்துறை, பொத்துவில், நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய கிளைகளுக்கான தெரிவுகள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்றதுடன் அவற்றிற்கான தலைவர், செயலாளர், பொருளாளர் அடங்கிய காரியக் குழுக்களும் தெரிவுசெய்யப்பட்டன.
காரியக்குழு தெரிவுகளை அடுத்து, நிந்தவூர் ஜுமுஆ மஸ்ஜிதில் அம்பாறை மாவட்ட ஜம்இய்யாவுக்கான தெரிவு நடைபெற்றது. இதன்போது புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பிராந்தியக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள்கள் மற்றும் முன்னாள் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகத் தெரிவு நடைபெற்றதுடன் பதவிதாங்குநர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இத்தெரிவுகள் அனைத்தும் ஜம்இய்யாவின் யாப்பு விதிகளுக்கமைய இரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையில் மிக நேர்த்தியாகவும் முறையாகவும் நடைபெற்றன.
ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அவர்களுடன் பிரிவின் செயலாளரான அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளஃரீப், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் மற்றும் அஷ்-ஷைக் எம்.எம். அலாப்தீன் ஆகியோரது மேற்பார்வையிலும் ஜம்இய்யாவின் பொது முகாமையாளர் சகோதரர் எஸ். ஜவாஹிர் சாலி உள்ளிட்ட ஜம்இய்யாவின் ஆளணியினரது பங்களிப்புடனும் குறித்த தெரிவுகள் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















– ACJU Media –


