2025 ஆகஸ்ட் 26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் (CCC) ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய இச்சந்திப்பு இடம்பெற்றது.
வருகை தந்திருந்த பிரமுகர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வரவேற்று உரையாற்றியதுடன் நாடளாவிய ரீதியிலான ஜம்இய்யாவின் செயற்பாடுகள், முன்னெடுப்புகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு, பலஸ்தீன் பற்றிய நிலைப்பாடு தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் நாட்டில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ள இஸ்ரேலியர்களின் இலங்கை வருகை குறித்தும் நாட்டில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள ஷபாத் இல்லம் மற்றும் சினகொக் யூத வழிபாட்டு தளங்கள் குறித்தும் அவற்றிற்கான சட்ட அனுமதிகள் குறித்தும் இதன்போது கேள்வியெழுப்பினார்.
அடுத்து ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய அவர்கள் இளம் வயதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கின்றமையை பாராட்டியதுடன் அவர் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய நிர்வாகியாக பதவி வகித்தமை, தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட்டமை போன்ற விடயங்களையும் குறிப்பிட்டுக் காட்டினார்.
மேலும், ஜம்இய்யா ஓர் அரசியல் சார்பற்ற நிறுவனம் என்பதனை சுட்டிக் காட்டிய தலைவர் அவர்கள், எமது வெளியீடுகளை தாங்கள் படித்தறிந்திருப்பீர்கள் என்று நம்புவதாகவும், நாம் எப்போதும் ஒற்றுமையுடனும் நல்லுறவுடனும் இணைத்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் இஸ்லாம் மற்றும் அதன் நற்போதனைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தல்களும் இல்லை என்ற அல்-குர்ஆனின் போதனையையும் எடுத்துரைத்தார்.
அத்தோடு முஸ்லிம் சமூகம் தேசிய பாதுகாப்பிற்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்பதனை உறுதியாகத் தெரிவித்த தலைவர் அவர்கள், நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் தாம் பாதுகாப்புத் துறையுடன் ஒத்துழைப்பாக செயற்பட்டதையும் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகளை பட்டியலிட்ட தலைவர் அவர்கள் 1990களில் வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான நீதியினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், முஸ்லிம் சமூகத்தில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட கல்விமான்கள் இலங்கையில் தான் கல்வி கற்றார்கள் என்பதனை தலைவர் அவர்கள் நினைவு கூர்ந்தத்துடன் வானியல் துறையில் சிறந்து விளங்கியவரும், முதன்முதலாக இலங்கைக்கான தொழுகை நேரங்களை கணித்தவரும், அரபுமொழியில் நூல்களை எழுதியவருமான அஷ்-ஷைக் அப்துஸ்ஸமத் ஆலிம் அவர்கள் கூட இலங்கையில் மாத்திரம் தான் கல்வி கற்றார்கள் என்பதனையும் குறிப்பிட்டுக் காட்டினார். அத்தோடு இவ்வாறான கல்விமான்களால் நாடு பெருமைப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனாலும் இந்நாட்டில் அரபுக் கல்லூரிகள் பல சவால்களை எதிர்கொண்டிருப்பதுடன் அல்-ஆலிம் பரீட்சைக்கு இன்றளவிலும் கூட தடை அமுலில் இருப்பதையும் தலைவர் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
மேலும், நாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை இலங்கையில் அறிமுகப்படுத்திய வரலாற்றை நினைவுகூர்ந்த தலைவர் அவர்கள் அதெற்கெதிரான பரப்புரைகளால் அது ஜம்இய்யாவிடமிருந்து பிரிக்கப்பட்டதையும் வேதனையுடன் தெரிவித்தார்.
இவ்வாறாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகளை பட்டியலிட்ட தலைவர் அவர்கள் இவ்விடயங்களில் எமக்கு ஒத்துழைப்பாகவும் நீதியினை பெற்றுக் கொடுக்கவும் கூட்டிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அவர்கள் இச்சந்திப்பு மிகவும் பயனுள்ள ஒரு சந்திப்பு என தெரிவித்ததுடன் எதிர்காலங்களில் ஜம்இய்யாவுடன் புரிந்துணர்வோடு இணைந்து பயணிப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் தமக்கு முடியுமான விடயங்களில் தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும் தம்மால் முடியாத விடயங்களில் உரிய தரப்புக்களை அணுகி தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனையடுத்து ஜம்இய்யாவின் தலைவர் அவர்களால் தமது வெளியீடுகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அவற்றில் சில பிரதிகளும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
சந்திப்பின் முடிவில், ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் சந்திப்பில் பங்கேற்ற நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியதுடன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அவர்களும் அவர்களுடன் கலந்துரையாடினார். அத்தோடு நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களது வருகை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் ஆளணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.


– ACJU Media –



