2025 ஒக்டோபர் 08ஆம் திகதி, தென்னாபிரிக்க ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் முஃப்தி இப்ராஹீம் பாம் உள்ளிட்ட குழுவினருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுககளை சேர்ந்த ஆலிம்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் உரையாற்றிய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கடந்த கால செயற்பாடுகள், பணிகள், எதிர்கொண்ட சவால்கள் குறித்து விளக்கக் காட்சிகளுடன் தெளிவுபடுத்தியதுடன் தற்போதைய அடைவுகளையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் தலைவர் அவர்கள், வருகை தந்திருந்த வெளிநாட்டு ஆலிம்களிடம் தத்தமது நாட்டில் வாழும் முஸ்லிம்களின் நிலைமைகள் பற்றியும் அங்கு முன்னெடுக்கப்படும் சமுதாயப் பணிகள் தொடர்பிலும் கேட்டறித்து கொண்டார்.
அதனை தொடர்ந்து உரையாற்றிய தென்னாபிரிக்க ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் முஃப்தி இப்ராஹீம் பாம் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பணிகள், சேவைகளை பாராட்டியதுடன் தீவிர சிந்தனைப் போக்குகள் மற்றும் சமூகத்திற்கான சவால்களின் போது ஆலிம்கள் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் உபதேசம் செய்தார்.
நிகழ்வின் இறுதியாக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் அவர்கள் முடிவுரை ஆற்றினார்.
இதன்போது வருகை தந்திருந்த வெளிநாட்டு ஆலிம்களுக்கு ஆங்கில மொழியிலான ஜம்இய்யாவின் வெளியீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





– ACJU Media –





