2025.05.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் 07 மாவட்டங்களைச் சேர்ந்த ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, அஷ்-ஷைக் இர்பான் முபீன் அவர்கள் ‘யாப்பின் அடிப்படையில் கிளைகள் எவ்வாறு இயங்குவது?’ எனும் தலைப்பில் விளக்கக்காட்சிகளுடனான தெளிவுகளை வழங்கினார். இரு கட்டங்களாக அவரது தெளிவுரை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக ஜம்இய்யாவின் கணக்காளர் சகோதரர் இர்பஃத் அவர்கள், கிளைகளின் நிதி முகாமைத்துவம் மற்றும் மேலாண்மை குறித்த தெளிவுகளை விளக்கக் காட்சிகளுடன் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், கிளைகளின் பதவிதாங்குனர்களுக்கான விசேட உரையொன்றினை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் நிகழ்வில் முக்கிய உரையொன்றை நிகழ்த்தினார்.
அதனையடுத்து உப தலைவர், பொதுச் செயலாளர், கிளைகள் விவகாரக்குழுவின் செயலாளர் மற்றும் ஏனைய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் சிலரது முன்னிலையில் 07 மாவட்டங்களையும் சேர்ந்த மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்களிடம் உறுதிமொழியெடுக்கப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கண்டி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களினை சேர்ந்த ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் சுமார் 130க்கும் மேற்பட்ட பதவிதாங்குனர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களது உயரிய ஒத்துழைப்பில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –