2026.04.08
1447.10.19
ஆரோக்கியமும் ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகள். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
عن عبدالله بن عباس رضي الله عنهما قال : قال النبي صلى الله عليه وسلم : نعمتانِ مغبونٌ فيهما كثيرٌ من الناس: الصحة والفراغ (رواه البخاري : 6412)
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகள் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு”என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹூல் புகாரி : 6412)
ஆரோக்கியத்தையும் ஓய்வு நேரங்களையும் திட்டமிட்டு சரியாக பயன்படுத்தும் போது எண்ணிலடங்காத பலன்களையும் வாய்ப்புகளையும் மனிதன் பெற்றுக் கொள்கின்றான்.
விடுமுறை காலங்களில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல், உறவினர்களுடன் சேர்ந்து நடத்தல், திறன்களை வளர்த்துக் கொள்ளல் போன்ற பயனுள்ள காரியங்களில் ஈடுபடுவதை புனித தீனுல் இஸ்லாம் ஊக்குவித்துள்ளது.
எமது நாட்டில் ஓய்வு காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பயணங்கள் சுற்றுலாக்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டன. பயணங்கள் மனித வாழ்க்கையில் தேவையான ஒன்றாகும். பயணங்களினூடாக மனிதன் பல படிப்பினைகளையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்வதினால் மார்க்க ரீதியாகவும் மற்றும் நல்ல எண்ணங்களுடனும் மேற்கொள்ளும் பயணங்களை புனித தீனுல் இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. நல்ல நோக்கமின்றி பாவங்களுக்காக மேற்கொள்ளும் பயணங்களை வெறுக்கின்றது. அப்பயணத்திற்கும் அதற்கு செலவழிக்கப்படும் பணதிற்கும் பாவங்கள் எழுதப்படுகின்றது.
சகல காரியங்களிலும் புனித தீனுல் இஸ்லாம் வழிகாட்டல்களையும் ஓழுங்குகளையும் கற்றுத் தந்ததைப் போன்று பயணங்களில் பேணப்பட வேண்டிய முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் புனித தீனுல் இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது.
இஸ்லாம் கற்றுத்தந்த பயண ஒழுக்கங்கள்:
- பயணம் ஆரம்பிக்கும் முன் இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் நலவை வேண்டுதல்.
- பிரயாணத்தில் ஒரு தலைவரை நியமித்து சகல காரியங்களிலும் ஆலோசனைகளுடன் செயல்படுவது பல அசௌகரியங்களிலிருந்து பாதுகாக்கும்.
- புறப்படுவதற்கு முன் குடும்பத்தாருக்கும் நெருங்கியவர்களுக்கும் அறிவித்தல்.
- பிரயாணத்திற்கு முன் பொறுப்புகளையும் குடும்ப கடமைகளையும் நிறைவேற்றிவிட்டு செல்லுதல்.
- பயண துஆக்களை ஓதுதல்.
اللهُ أَكْـبَر، ا للهُ أَكْـبَر، ا للهُ أَكْـبَر
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَىٰ
وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَىٰ
اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ
اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ
وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْل
திரும்பி வரும் போது :
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
- பர்ளான தொழுகைகளை தவறாமல் கடைப்பிடித்தல்.
- பயணத்தில் உள்ள மார்க்க சலுகைகளை சரியாக அறிந்து கடைப்பிடித்தல்.
- யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் பயணத்தை திட்டமிடுதல்.
- பிரயாணத்தை ஸதகாவுடன் ஆரம்பித்தல்.
- வீண்செலவுகளை தவிர்த்தல்.
- அஜ்னபி மஹ்ரமி ஒழுக்கங்களை பேணுதல்.
- கெட்ட மோசமான சகவாசத்தை முற்றாக தவிர்த்தல்.
- இசை மற்றும் அனாச்சாரங்களை முற்றிலும் தவிர்த்தல்.
- நிதானமாக வாகனங்களை செலுத்துதல்.
- தேவைகள் முடிந்ததும் தாமதமின்றி வீடு திரும்புதல்.
- பாதை ஒழுங்கை பேணுவதுடன் பிற மதத்தவர்களுக்கு தொல்லையின்றி நடந்துகொள்ளல்.
- இஸ்லாத்தின் தனித்துவத்தை பேணி கௌரவமாக நடந்துகொள்ளல்.
- புனித தீனுல் இஸ்லாம் காட்டித்தந்துள்ள ஆடை முறைமைகளை பேணுதல்.
- ஹலாலான உணவை உட்கொள்வதில் தவறாது கவனம் செலுத்தல்.
மேற்குறிப்பிட்ட ஒழுங்குகளை பேணி புனித தீனுல் இஸ்லாத்தின் தனித்துவத்தை பாதுகாத்து எமது மார்க்கத்தின் அடையாளமானது, மற்றவர்களுக்கு தொல்லையின்றி பயனுள்ளவர்களாக செயற்படுவதாகும் என்பதை நினைவில் கொண்டு தூரநோக்குடன் செயல்படுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடாத்தி, நம்முடைய செயல்களை ஏற்றுக் கொள்வானாக!
வஸ்ஸலாம்!
அஷ்-ஷைக் எச் உமர்தீன்
தவிசாளர் – பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம்
உதவிச் செயலாளர் – பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



