ACJU பிரச்சாரப் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தை மையப்படுத்தி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள்

2026 ஏப்ரல் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரப் பிரிவினரின் வழிகாட்டலில் ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புல்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினை மையப்படுத்தி பல கட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், முதலாவதாக யாழ் மாவட்ட ஆலிம்களுடன் ஒரு சுமுகமான சந்திப்பு முஹம்மதிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, யாழ் மாவட்டத்திலுள்ள சில ஜுமுஆ பள்ளிவாயல்களில் ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் குத்பா உரைகள் நிகழ்த்தப்பட்டன. முஹம்மதிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களும், நாச்சிக்குடா-முஹியுத்தீன் ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் அவர்களும், யாழ் பெரிய பஸார்-முஹியுதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் அவர்களும், சோனகர் தெரு-அபூபக்ர் ஜுமுஆ பள்ளிவாயலில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எல். சாஜித் ஹுஸைன் அவர்களும் குத்பாக்களை நிகழ்த்தினர்.

அடுத்ததாக, ‘நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு சிறந்த மனிதனாக வாழ்தலும் சரியான இலக்கை கண்டறிதலும்’ எனும் தலைப்பில் க.பொ.த  சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது. இதில் பெருமளவிலான மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

அதனையடுத்து ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பெண்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சிகள், சோனகர் தெரு கமால் பள்ளிவாயல், சோனகர் தெரு-அபூபக்ர் ஜுமுஆ பள்ளிவாயல், முஹம்மதிய்யா ஜுமுஆ பள்ளிவாயல் ஆகியவற்றில் அஸர் தொழுகையினை தொடர்ந்து நடைபெற்றன. இதில், குறித்த மஹல்லாக்களை சேர்ந்த பெருமளவிலான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.

அடுத்து, யாழ் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்தவர்கள், ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் சமூக முக்கியஸ்தர்களுடனான ஒரு விசேட சந்திப்பு மானிப்பாய் வீதி, மர்கஸ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இதன்போது ‘சிறந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் சமூகத் தலைவர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் இது தொடர்பிலான சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு வலுவான சமூகத்தை கட்டமைப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் யாழ் மாவட்ட ஜம்இய்யா சார்பில் அஷ்-ஷைக் ஏ.எல். ரளீம் அவர்கள் கலந்துகொண்டதுடன் ஜம்இய்யா தலைமையகம் சார்பில் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன்,  உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எல். சாஜித் ஹுஸைன், பொது முகாமையாளர் எஸ். ஜவாஹிர் ஸாலிஹ், ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன