2026.04.02
1447.10.13
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தண்ணீர் மனித வாழ்விற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமை அல்லது போதாமை காரணமாக பயிர்கள் வாடி அழிகின்றன. கால்நடைகள் உள்ளிட்ட ஏனைய உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. போதுமான நீர் இல்லாத காரணத்தால் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அசாதாரண சூழ்நிலைகளில், எமது அன்றாட வாழ்வியல் முறைகளை மீளாய்வு செய்து திருத்திக் கொள்வதும், அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் நமக்கு இறங்கும்.
எனவே, எமது பாவங்களுக்காக நாம் தவ்பா செய்து, இஸ்திக்ஃபார் செய்து, வீண்விரயங்களைத் தவிர்த்து, தானதர்மங்களில் ஈடுபட்டு, நாடு முழுவதும் நிலவும் வறட்சி நீங்கி மழை பொழிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பாக, வறட்சி அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பொறுப்பாளர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இமாம்கள், மழை வேண்டி தொழுகை (ஸலாதுல் இஸ்திஸ்கா) நடத்துவதற்கும், அதற்கான துஆக்களை ஒதுவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தமது சமூகத்தினருக்கு வழங்கிய உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
“உங்கள் இறைவனிடத்தில் மன்னிப்புக் கேளுங்கள். நிச்சயமாக அவன் மிகுந்த மன்னிப்பவன். (அவ்வாறு செய்தால்) அவன் உங்களுக்கு இடைவிடாது மழையைப் பொழிவான். மேலும் செல்வங்களாலும், பிள்ளைகளாலும் உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்கு தோட்டங்களையும் ஆறுகளையும் ஏற்படுத்துவான்.” (ஸூரா நூஹ்: 10 – 12)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள்:
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ (سنن أبي داود: 116)
اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا (صحيح مسلم: 897)
اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ (سنن أبي داود: 117)
குறிப்பு: இவ்விடயத்தில் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளை பொறுப்பாளர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இமாம்கள் தங்களது பிரதேசங்களுக்கேற்ப தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



