2025.06.26ஆம் திகதி, முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்த்தல் எனும் தொனிப்பொருளில் அரச தரப்புக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று வெளிவிவகார அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 30 அன்று இடம்பெற்ற முதலாம் கட்ட ஒன்றுகூடலின் தொடர்ச்சியாக இச்சந்திப்பு நடைபெற்றது.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கலந்துகொண்டதுடன் ஏனைய முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் அரபு கல்லூரிகளுக்கான சட்ட ஒழுங்கு, மூடப்பட்ட பள்ளிவாயல்கள் விவகாரம், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகள், கோவிட் ஜனாஸா எரிப்பு, பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்தில் கற்கும் முஸ்லிம் மாணவிகளது ஆடை விவகாரம் போன்ற சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், 02 மாதங்களுக்கொருமுறை இவ்வாறான தொடர் சந்திப்புகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான அரச தரப்பு மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமிப்பதற்கும் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இச்சந்திப்பில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கெளரவ பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி, புத்தசாசன-சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் கௌரவ ஹினிதும சுனில் செனவி, தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்-ஷெய்க் கெளரவ முஹம்மத் முனீர் முளப்பர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் ஆகியோருடன் அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் தொடர் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


– ACJU Media –




