2023.02.02 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கெளரவ பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்துக்கு வருகை தந்து ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சுமுகமான சந்திப்பொன்றை மேற்கொண்டார்கள்.
எதிர்வரும் காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சமூக முன்னேற்றப் பணிகளில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.
மேலும் இச்சந்திப்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்களுடன் சேர்ந்து அதன் உதவிப் பணிப்பாளர்களான அஷ்-ஷைக் அன்வர் அலி மற்றும் அஷ்-ஷைக் அலா உட்பட அதன் பணியாளர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி நளீமி ஆகியோரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு ஜம்இய்யாவின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு அண்மையில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரை, ஸவ்த்துல் உலமா நூற்றாண்டு சிறப்பு மலர், ஜம்இய்யாவின் கடந்த ஐந்தாண்டு கால செயற்பாட்டறிக்கை மற்றும் அதன் ஏனைய வெளியீடுகள் என்பனவும் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.










