2018.03.26 (04.07.1439)
பிரச்சினைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் முஸ்லிம்களாகிய நாம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களின் முன்மாதிரிகளில் இருந்தும் சரியான விளக்கங்களைப் பெற்று தீர்வுகளைக் காண முயற்சிப்பதனூடாகவே நிலமைகளை சீராகக் கையாள முடியும் என்பதை அனைவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
பல்வகை சமூகங்களுடனும், சமயத்தவர்களுடனும் சேர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையைக் கடைபிடித்தும், நல்லுறவைப் பேணியும் நடந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதனைத் தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பொழுது நாம் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அண்மையில் கண்டிப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் போது ஸஹ்ரான் மௌலவி என்பவர் ஏனைய மதத்தவர்களைச் சாடியும், அல்குர்ஆனிய வசனங்களை மேற்கோள் காட்டி உடனடியாக ஜிஹாத் செய்ய தயாராக வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய காணொலி சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. அதே நேரம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமிய வழிகாட்டல்களை மார்க்க அறிஞர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
பிரச்சினைகளின் போது இவ்வாறான காணொலிகள் எமது சமூகத்தை பிழையான பாதையில் இட்டுச் செல்லும். எனவே பிரச்சினைகளின் போது நாட்டு சட்டங்கங்களை மதித்து, தம்மையும், தமது உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் தற்பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது தான் எமது பொறுப்பாகும்.
வன்முறைகளையும், பிரச்சினைகளையும் வன்மையாக கண்டிக்கும் இஸ்லாம் மாற்றுமதத்தவர்களுடன் எவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்ட தவறவில்லை. அதே போன்று ஜிஹாத் பற்றிய வசனங்களுக்கான பூரண விளக்கங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
எனவே இவ்வாறான காணொலிகள், பிரச்சாரங்கள் எம்மை மேலும் வீண் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதால் இவற்றை முற்றாக தவிர்ந்து நடக்க வேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எச்.உமர்தீன்
செயலாளர், பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா






